/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பண்டைய கால செங்கற்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
/
பண்டைய கால செங்கற்கள் பாலாற்றில் கண்டெடுப்பு
ADDED : அக் 05, 2025 02:02 AM

மாமல்லபுரம்:பாலாற்றில் பண்டைய கால செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அரசு கலை, அறிவியல் கல்லுாரி வரலாற்றுத்துறை விரிவுரையாளரும், பாலாற்று மேற்கள ஆய்வாளருமான மதுரைவீரன் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றுப் படுகையில், பல ஆண்டுகளாக கள ஆய்வு செய்து வருகிறேன். சோழர், பல்லவர் கால உலோக நாணயங்கள், பழங்கால ஆபரணங்கள், பெருங்கற்கால கற்கருவிகள் போன்றவற்றை கண்டெடுத்தேன். முதல் முறையாக மனித குறியீடுடன் உள்ள பழங்கால செங்கற்கள், தற்போது கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த, திருமுக்கூடல் ஆறுகள் சங்கம படுகையில், பண்டைய கால செங்கல், 24 செ.மீ., நீளம், 14 செ.மீ., அகலம், 5 செ.மீ., கனம் என்ற அளவில் முழுமையாக கிடைத்தது.
அதில் கீறல் ஓவியமாக, மனித உருவங்கள் உள்ளன. இதேபோன்ற ஓவியங்கள் செங்கல் திருக்கழுக்குன்றம் அடுத்த, ஈசூர் பாலாற்றில் கிடைத்தது. மற்றொரு உடைந்த செங்கல்லை, இரும்புலிச்சேரி பாலாற்றில், பாண்டூர் அரசுப்பள்ளி மாணவன் கண்டெடுத்து ஒப்படைத்தான்.
இந்த கற்களில் வரையப்பட்டுள்ள மனித ஓவியம் போன்றே, வெவ்வேறு பகுதி பாறைகுன்றுகளில் காணப்படுகின்றன. பண்டைய மனிதர்கள், அவற்றை இயற்கை சாயங்களை பயன்படுத்தி வரைந்துள்ளனர்.
ஆய்வாளர்கள் பரிசோதித்ததில், இத்தகைய ஓவிய கற்கள், தமிழகத்தில் முதல் முறையாக இங்கு தான் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கற்கள் சங்ககாலம் அல்லது அதற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.