/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழமையான சிவலிங்கம் உத்திரமேரூரில் கண்டெடுப்பு
/
பழமையான சிவலிங்கம் உத்திரமேரூரில் கண்டெடுப்பு
ADDED : செப் 09, 2025 12:49 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் அருகே, கருங்குட்டை சுடுகாட்டில் பழமை வாய்ந்த சிவலிங்கம், நேற்று கண்டெடுக்கப்பட்டது.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் செல்லும் சாலையோரம், கருங்குட்டை சுடுகாடு உள்ளது. இங்கு, கேட்பாரற்று சிவலிங்கம் சிலை ஒன்று இருந்தது.
இதை, தனி நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்து அங்கு வந்த சிவனடி யார்கள் சிலர், அந்த பகுதியை சுத்தம் செய்து, சிவலிங்கத்திற்கு பூஜை செய்தனர்.
இதுகுறித்து, சிவனடியார் காஞ்சி சிவபாலன் கூறியதாவது:
கருங்குட்டை சுடுகாட்டு பகுதியில், கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், 8 அடி உயரத்தில் உள்ளது.
இதை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட மண்டப துாண்கள் மண்ணில் புதைந்துள்ளன. இது, பல்லவர் காலத்து சிலையாக இருக்கலாம். இதை சம்பந்தப்பட்ட துறையினர் மீட்டு, பொதுமக்களின் வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:
வீரத்துடன் போர் புரிந்து இறந்த மன்னர்களுக்கு நினைவாக, சிறிய அளவிலான சிவலிங்கம் அமைத்து வழிபடுவது பள்ளிப்படை. மற்ற வீரர்கள் இறந்தால், அவர்களுக்கு அமைக்கப்படுவது நடுகல்லாகும்.
இந்த சிவலிங்கத்தை பார்க்கும் போது, பள்ளிப்படை லிங்கம் இல்லை என்பது உறுதியாகிறது. பாணம் வடிவில் 8 அடி உயரத்தில் இருக்கும் லிங்கம், முன் ஒரு காலத்தில் வழிபாட்டில் இருந்த சிவலிங்கமாக இருக்கலாம்.
இந்த பீடத்தை பார்க்கும் போது, தாமரை இதழ் விரித்தது போல தோற்றத்தில் உள்ளது.
இதை, சம்பந்தப்பட்ட தொல்லியல் துறையினர் மீட்டு, வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.