sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மெய்யூர் ஏரியில் இருந்து மண் எடுக்க மீண்டும் விண்ணப்பம்...நுாதன கொள்ளை:4 அடிக்கு கீழே கிடைக்கும் மணலை திருடுவதால் கடும் எதிர்ப்பு

/

மெய்யூர் ஏரியில் இருந்து மண் எடுக்க மீண்டும் விண்ணப்பம்...நுாதன கொள்ளை:4 அடிக்கு கீழே கிடைக்கும் மணலை திருடுவதால் கடும் எதிர்ப்பு

மெய்யூர் ஏரியில் இருந்து மண் எடுக்க மீண்டும் விண்ணப்பம்...நுாதன கொள்ளை:4 அடிக்கு கீழே கிடைக்கும் மணலை திருடுவதால் கடும் எதிர்ப்பு

மெய்யூர் ஏரியில் இருந்து மண் எடுக்க மீண்டும் விண்ணப்பம்...நுாதன கொள்ளை:4 அடிக்கு கீழே கிடைக்கும் மணலை திருடுவதால் கடும் எதிர்ப்பு


ADDED : ஆக 27, 2025 12:37 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மெய்யூர் ஏரியில் மண் எடுக்க அனுமதி பெற்ற தனியார் ஒப்பந்ததாரர், பல அடி ஆழத்திற்கு தோண்டி நுாதனமாக மணல் எடுத்து விற்றதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் ஏரியில் மண் எடுக்க பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்துள்ளதால், அனுமதி அளிக்க கூடாது என, கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர் ஊராட்சி, பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள மெய்யூர், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

நெல் சாகுபடி மெய்யூர் ஊராட்சியில் உள்ள ஏரி, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி, 2,000 ஏக்கருக்கும் மேல் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாய தொழிலுடன் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு கோடை காலத்தில், இந்த ஏரி தண்ணீர் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு, மெய்யூர் ஏரியிலிருந்து மண் எடுக்க, கனிம வளத்துறையினரிடம் அனுமதி கோரி, தனியார் ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்தனர்.

இம்மனுக்களை பரிசீலனை செய்து, ஏரியில் மண் எடுக்க, தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களுக்கு அனுமதி அளித்தனர்.

அதன் பின், 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக மண் தோண்டப்பட்டு, லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏரியில், நான்கு அடிக்கு கீழ்ப்பகுதியில், இயற்கையாகவே மணல் அதிக அளவில் உள்ளது.

நான்கு அடிக்கு மேல் இருந்த களிமண்ணை எடுத்த பின், பாலாற்று மணல் கிடைத்தது.

தடை விதிப்பு இதையடுத்து, மண் அள்ளும் போர்வையில், நுாதனமாக மணல் கடத்தப்பட்டு ஒப்பந்ததாரரால் விற்பனை செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றில் மணல் எடுக்க, 2012ம் ஆண்டிலிருந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, பாலப் பணிகளுக்கு மணல் தேவைப்பட்டதால், மேற்படி எடுக்கப்பட்ட மணல், இவர்களுக்கு விற்கப்பட்டது.

குறிப்பாக, இந்த பாலாற்று மணல் தனியார் நிறுவனங்கள், வீடு கட்டுவோரிடம், ஒரு லாரி மண், 40,000 ரூபாய் வரை, ஒப்பந்ததாரரால் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நுாதன மணல் கொள்ளையை மோப்பம் பிடித்த அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் ஆகியோரை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், 'கவனிப்பு' செய்ததால், அவர்களும் மவுனமாகினர். இதனால், மெய்யூர் ஏரியில் 15 அடி ஆழத்திற்கும் மேல் மணல் தோண்டி விற்பனை செய்யப்பட்டது.

தற்போது இந்த ஏரியில், மணல் எடுத்த இடங்களில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரியில் குளிக்கச் செல்பவர்கள் இந்த பகுதிக்குச் சென்றால், உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.

விண்ணப்பம் இதையடுத்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஏரியில் இருந்து மண் எடுப்பதை தடுக்க கோரி, அப்போது மனு அளித்தனர். ஆனால், மனு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது, மணல் எடுத்து வருமானம் பார்த்த ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர், ஏரியில் மீண்டும் மண் எடுத்து விற்பனை செய்ய, கனிம வளத்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்து உள்ளனர்.

இதையறிந்த கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மெய்யூரில் ஏரியில் மண் எடுக்க அனுமதி அளிக்க கூடாது என, மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் மனு அளித்துள்ளனர். இம்மனு மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

மெய்யூர் ஏரியில் மண் எடுக்க, தனியார் ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், ஏரியில் இருந்து மண் எடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை. - கனிம வளத்துறை அதிகாரிகள், செங்கல்பட்டு.


அனுமதிக்க கூடாது


ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டதால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆற்று மணல் கிடைக்காததால், பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், எம் - சாண்ட் மண் வாங்கி பயன்படுத்த துவங்கினர். மாவட்டத்தில் வீடு, அரசு கட்டடங்கள், பாலங்கள் அமைக்கும் பணிக்கும், எம் - சாண்ட் மண் பயன்படுத்தி வருகின்றனர். மக்களும், எம் - சாண்ட் மண் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். மெய்யூர் ஏரியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் ஒப்பந்ததாரர் மண் எடுத்தார். இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டதுடன், மணல் கொள்ளையும் நடந்தது. மீண்டும் மண் எடுக்க, தனியார் ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மெய்யூர் ஊராட்சி தலைவர் ஆதரவாக செயல்பட வேண்டுமென, தனியார் ஒப்பந்ததாரர்கள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏரியில் மண் எடுக்க அனுமதிக்க கூடாது. ஏரியை பாதுகாக்க கோரி போராட்டம் நடத்தப்படும்.

- டி.நித்தியானந்தம், சமூக ஆர்வலர், மெய்யூர்.

நயினார்குப்பம் மக்கள் எதிர்ப்பு


செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில், கழிவெளி ஓரத்தில் சிலிக்கான் தாது மண் படுகைகள் உள்ளன. தமிழ்நாடு கனிம வள நிறுவனம் சார்பாக 'டெண்டர்' விடப்பட்டு, முதலியார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் தாது மண் எடுக்கப்பட்டு வருகிறது. முதலியார்குப்பம் கிராமத்தில் அதிக அளவில் சிலிக்கான் தாது மண் ஏற்றுமதி செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. கழிவெளி நீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்புநீராக மாறி வருவதால் பொதுமக்கள், குடிநீருக்காக அலைகின்றனர். தற்போது புதிதாக, நயினார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் தாது மண் எடுக்க அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி வழங்க, நயினார் குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.








      Dinamalar
      Follow us