/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீயணைப்பு நிலையம் கட்ட செய்யூரில் பூமி பூஜை
/
தீயணைப்பு நிலையம் கட்ட செய்யூரில் பூமி பூஜை
ADDED : ஜூலை 10, 2025 01:49 AM

செய்யூர்:செய்யூரில், 2.24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.
செய்யூரில், துணை வேளாண் விரிவாக்க மையம் அருகே, கடந்த 10 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
போதிய இடவசதியின்றி இந்த தீயணைப்பு நிலையம் இயங்கி வரும் நிலையில், புதிய கட்டடம் கட்ட, செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக் கழகம் சார்பாக, புதிய தீயணைப்பு நிலைய கட்டடம் கட்ட, கடந்தாண்டு செப்டம்பரில் மண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து, 5,661 சதுர அடி பரப்பளவில், 2.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மூன்று தளங்களில் அலுவலகம், ஓய்வு அறை, ஆலோசனைக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு 'டெண்டர்' விடப்பட்டது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை, நேற்று காலை நடந்தது.
இதில், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் லட்சுமிநாராயணன் மற்றும் துணை அலுவலர் செந்தில் குமரன் மற்றும் தமிழ்நாடு காவல் வீட்டுவசதிக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.