/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றில் மாயமான பெயின்டர் உடல் மீட்பு
/
பாலாற்றில் மாயமான பெயின்டர் உடல் மீட்பு
ADDED : அக் 25, 2025 02:40 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பாலாற்றில் குளித்த போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெயின்டரின் உடலை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 48; பெயின்டர்.
நேற்று முன்தினம் மதியம் 12:30 மணியளவில், தன் வீட்டின் அருகில் உள்ள பாலாற்றில் துணி துவைக்கச் சென்றார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில், துணி துவைத்த பின், சுப்ரமணி ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.
தகவலின்படி வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், நேற்று முன்தினம் இரவு வரை, ரப்பர் படகு மூலமாக சென்று, சுப்ரமணியை தேடியும் கிடைக்கவில்லை.
இருள் சூழ்ந்ததால், சுப்ரமணியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
நேற்று காலை, மீண்டும் சுப்ரமணியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது, பாலாற்று புதரில் சிக்கி தண்ணீருக்கு அடியில் கிடந்த சுப்ரமணியின் உடலை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

