/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் எல்லை குழப்பம் விபத்தில் சிக்குவோரை மீட்பதில் தாமதம்
/
ஜி.எஸ்.டி., சாலையில் எல்லை குழப்பம் விபத்தில் சிக்குவோரை மீட்பதில் தாமதம்
ஜி.எஸ்.டி., சாலையில் எல்லை குழப்பம் விபத்தில் சிக்குவோரை மீட்பதில் தாமதம்
ஜி.எஸ்.டி., சாலையில் எல்லை குழப்பம் விபத்தில் சிக்குவோரை மீட்பதில் தாமதம்
ADDED : மார் 21, 2025 11:39 PM
கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி சந்திப்பு முதல் பெருங்களத்துார் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், நான்கு காவல் நிலைய எல்லைகள் உள்ளதால், வாகன விபத்தில் சிக்குவோரை மீட்பதில், காவல் நிலையங்களிடையே குழப்பம் நிலவுவதாக, புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி., சாலை, சென்னையின் நுழைவு வாயிலாக உள்ளது.
இதில், கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி சந்திப்பு முதல், பெருங்களத்துார் வரையிலான 4 கி.மீ., துாரமுள்ள சாலை, நான்கு காவல் நிலையங்களுக்கான எல்லையாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதனால், வாகன விபத்து உள்ளிட்ட இடர்களில் சிக்குவோரை கண்டறிந்து, உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட, போலீசாருக்குள் குழப்பம் நிலவுகிறது.
இதனால் காலதாமதம் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான 29 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையின் பெரும் பகுதி, தாம்பரம் மாநகர காவல் எல்லையில் வருகிறது.
இந்த வழித்தடத்தை சென்னையிலிருந்து 'வெளியேறுதல்', சென்னைக்குள் 'நுழைதல்' என, இரு பிரிவாக காவல் துறை பிரித்துள்ளது.
'வெளியேறுதல்' என்ற வகையில், பெருங்களத்துார் முதல் வண்டலுார் இரணியம்மன் கோவில் அருகே உள்ள சங்கீதா உணவகம் வரை, பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து காரணை புதுச்சேரி சந்திப்பு வரை, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எல்லை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது, வெளியேறுதல் வகையில் மொத்தமுள்ள 4 கி.மீ., துாரமுள்ள சாலை, இரண்டு காவல் நிலையங்களுக்கு எல்லையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'நுழைதல்' என்ற வகையில், காரணை புதுச்சேரி முதல் ஆதனுார் மேம்பாலம் வரை, கூடுவாஞ்சேரி காவல் நிலையம், அங்கிருந்து புஹாரி ஹோட்டல் வரை, கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புஹாரி ஹோட்டலில் இருந்து வண்டலுார் இரணியம்மன் கோவில் வரை, வண்டலுார் காவல் நிலையத்திற்கும், அதன் பின் பெருங்களத்துார் வரை பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு எல்லை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு கி.மீ., வழித்தடத்தில், ஆறு வகையான எல்லை பிரிக்கப்பட்டு, அதில் நான்கு காவல் நிலையங்களுக்கான எல்லை உள்ளது வாகன ஓட்டிகளுக்கோ, பொது மக்களுக்கோ தெரியாது.
உதாரணமாக, 'வெளியேறுதல்' பாதையில், வண்டலுார் ரயில் நிலையம் அருகே நடக்கும் விபத்து, கிளாம்பாக்கம் போலீசார் தொடர்புடைய வழக்காகவும், 'நுழைதல்' பாதையில் நடக்கும் விபத்து, வண்டலுார், ஓட்டேரி காவல் நிலைய வழக்காகவும் மாறுகிறது.
விபத்தில் சிக்குவோருக்கு, இந்த விபரங்கள் தெரியாது. எனவே, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் ரயில் நிலையம் அருகே விபத்து நடந்தால், அது வண்டலுார் காவல் நிலையத்திற்கு தான் வரும் என கணித்து, முதலில் அந்த காவல் நிலையத்தை தொடர்பு கொள்கின்றனர்.
பின், அது கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வரும் என்பது தெரிய வர, காலதாமதம் ஏற்படுகிறது.
அதுபோல், 'நுழைதல்' பிரிவிலும் பல இடங்களில் காவல் நிலைய எல்லை பிரச்னை உள்ளதால், பல நேரங்களில் 'இது எங்கள் எல்லை இல்லை' என, போலீசார் தெரிவித்து, அதன் பின் உரிய காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கூறி, அவர்கள் சம்பவ இடம் வருவதற்கும், கால தாமதம் ஏற்படுகிறது.
தவிர, காரணை புதுச்சேரி முதல் பெருங்களத்துார் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், காவல் நிலைய எல்லைகள் குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிவோருக்கும் உரிய புரிதல் இல்லை.
எனவே, விபத்து தொடர்பாக அவர்களுக்கு தகவல் வரும் போது, எந்த காவல் நிலையத்திற்கு அந்த தகவலை தெரிவிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு, வேறு காவல் நிலையத்திற்கு அந்த தகவலை கூறி விடுகின்றனர்.
இதனால், காரணை புதுச்சேரி சந்திப்பு முதல் பெருங்களத்துார் வரை உள்ள 4 கி.மீ., ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள காவல் எல்லை குழப்பத்தை தீர்க்க, தாம்பரம் போக்குவரத்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.