/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் சந்திப்பில் பெட்டி பாலம் அமைப்பு
/
மாமல்லபுரம் சந்திப்பில் பெட்டி பாலம் அமைப்பு
ADDED : ஜன 07, 2026 06:39 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், அரசு மருத்துவமனை சந்திப்பில், புதுச்சேரி சாலையின் குறுக்கில் கடக்க, பெட்டி பாலம் கட்டப்படுகிறது.
மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தும் பணிகள், 2022ல் துவக்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சாலையில், பிற சாலைகள் குறுக்கிடும் பகுதிகளில் மேம்பாலம், பெட்டி பாலம் ஆகியவை கட்டப்படுகின்றன.
மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், விபத்து அபாய குறுகிய வளைவுகளுடன் உள்ள, பழைய கிழக்கு கடற்கரை சாலை தவிர்க்கப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் இருந்து, பழைய சாலைக்கு சற்று வடக்கில், நேரான புதிய சாலை அமைத்து, பழைய மாமல்லபுரம் சாலை மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில், இடையூறு இல்லாமல் எளிதாக கடக்கவும், தேசிய நெடுஞ்சாலை - உட்புற சாலைகள் இடையே, தேசிய நெடுஞ்சாலையின் கீழ், வாகனங்கள் குறுக்கில் கடக்கவும் கருதி, பெட்டி பாலம் அமைக்கப்படுகிறது.
மாமல்லபுரம் - புதுச்சேரி தடத்தில், பெட்டி பாலம் அமைத்து, சாலை அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து, அதில் வாகனங்களை அனுமதித்து, அதன் பின் புதுச்சேரி - மாமல்லபுரம் தடத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது.

