ADDED : அக் 03, 2024 07:28 PM
சென்னை:சென்னை வடபழனி, ஏ.வி.எம்., அடுக்குமாடி குடியிருப்பை ரே்ந்தவர் சங்கர், 40. இவர், சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 3ம் தேதி பீரோவில் இருந்த நகையை சரிபார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த, கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கே.கே., நகர் காவல் நிலைய எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். புகார் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ., ராஜேந்திரன், அவரது நண்பர் மொபைல் எண்ணிற்கு 20,000 லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட சங்கரிடம், எஸ்.ஐ., அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சங்கர் தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ., ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

