/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் விளைச்சல் போட்டி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 02, 2025 09:45 PM
செங்கல்பட்டு:மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள விவசாயிகளுக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை துறை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை:
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியை பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், கேழ்வரகு, உளுந்து, நிலக்கடைலை, எள், கரும்பு ஆகிய பயிர்களில் மாநில அளவில் அதிக உற்பத்தியை பெறும் விவசாயிகளுக்கு, பயிர் விளைச்சல் போட்டி மூலம், பங்குபெற இலக்கு வழங்கப்பட்டு உள்ளது.
கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களில் மாநில அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 5 ஏக்கர் மற்றும் எள் பயிருக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதில், 50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிர் போட்டிக்காக அறுவடை செய்யப்பட வேண்டும். நில உடைமைதாரர்கள் மற்றும் நிலக்குத்தகை தாரர்கள் இப்போட்டியில் பங்குபெற தகுதியுடையவர்கள்.
மாநில அளவிலான பரிசுகள் பயிர் அறுவடை நாளில் வரையறுக்கப்பட்ட ஈரப்பதத்துடன் கூடிய விலை பொருளின் மகசூலில் எடையின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி அறுவடை வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளும் நுழைவுக்கட்டணம் 150 ரூபாய் செலுத்தி, சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் படிவத்தை பூர்த்தி செய்து, உத்தேச அறுவடை தேதிக்கு 30 நாட்கள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளையும் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.