sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டம்...கிடப்பில்!:ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை கடற்கரை

/

மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டம்...கிடப்பில்!:ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை கடற்கரை

மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டம்...கிடப்பில்!:ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை கடற்கரை

மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' திட்டம்...கிடப்பில்!:ஆக்கிரமிப்புகளால் சீரழியும் மாமல்லை கடற்கரை


ADDED : ஜூன் 02, 2024 12:00 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' சுற்றுலா மேம்பாட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மாமல்லபுரம் கடற்கரை சீரழிந்து வருகிறது. வியாபார கடைகள் ஆக்கிரமிப்புகள், சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து, சுற்றுலா பயணியரை முகம் சுழிக்க வைக்கின்றன.

மாமல்லபுரத்தில் பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் உள்ளன. இயற்கை எழில்மிக்க வங்க கடற்கரையும் சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது.

சுற்றுலா பகுதி கடற்கரை, இயற்கை சுற்றுச்சூழல், துாய்மை, சுகாதாரம் ஆகியவற்றுடன் பராமரிப்பது அவசியம்.

இச்சூழலுக்கு மாறாக, வியாபார கடைகளின் ஆக்கிரமிப்புகள், சுகாதார சீர்கேடுகள் பெருகி, கடற்கரை முற்றிலும் சீரழிகிறது.

கடந்த 20 ஆண்டுகள் முன், கடற்கரை பகுதியில், வியாபார ஆக்கிரமிப்புகள் இல்லை. இயற்கை சுற்றுச்சூழலுடன் காணப்பட்டது.

நாளடைவில், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களால், பயணியர் வருகை பெருகி, சுற்றுலா மேம்பட்டது.

சிற்ப பகுதிகள், கடற்கரை ஆகிய முக்கிய பகுதிகளில், பயணியரிடம் வியாபாரம் செய்ய கருதி, நடைபாதை வியாபாரிகள் பெருகினர். அவர்களால் சுற்றுலாவிற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

அதனால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, கடற்கரை பகுதியில் பயணியர் நடக்கவே இடமின்றி தவிக்கின்றனர்.

தொல்லியல் கோவில் தென்புற பகுதி கடற்கரையின் நீண்டதொலைவிற்கு, கைவினைப் பொருட்கள், பண்டங்கள், குளிர்பானம், ஐஸ் க்ரீம், வறுவல் மீன், இளநீர் உள்ளிட்டவை விற்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

சுற்றுலாவால் வியாபாரம் பெருகுவதால், இத்தகைய நடைபாதை கடைகள், நாளுக்கு நாள் பெருகுகின்றன. புதிய வியாபாரிகள், மணல்வெளியில் அடுத்தடுத்து ஆக்கிரமித்து, வியாபார இடமாக கடற்கரை மாறியுள்ளது.

மணல்வெளி பகுதியில், அவரவர் வியாபார எல்லையாக, சவுக்கு, நைலான் கயிறு, பின்னல் வலை ஆகியவற்றால், வியாபாரிகள் தடுப்பு அமைத்துள்ளனர்.

மேலும், பலுான் சுடுதல், பொருள் மீது வளையம் வீசுதல் உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகள், இயந்திர ராட்டினங்கள் என பெருகுகின்றன. அவை தொல்லியல் கற்கோவிலை மறைத்து, அதை கடற்கரையிலிருந்து காண இயலாத அவலத்தில் உள்ளது.

வியாபார குப்பை, பலுானை சுட்டு தெறிக்கும் ரப்பர் துணுக்குகள், இளநீர் மட்டைகள், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்டவை மணல்வெளியில் குவிக்கப்படுகின்றன.

பயணியர் சவாரி குதிரைகள் சாணம் இடுகின்றன. இத்தகைய அலங்கோலம், சுகாதார சீர்கேடு என, அருவருப்பாக கடற்கரை மாறியுள்ளது. சாணம், மீன் உணவு கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

ராட்டினம், சிறுவர் குதித்து விளையாடும் ரப்பர் சாதனம் உள்ளிட்டவற்றின் டீசல் மோட்டார் வெளியிடும் கரும்புகை, அப்பகுதி சுற்றுச்சூழலை கெடுக்கிறது. நச்சுப்புகையை நுகர்ந்து, பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய ஆக்கிரமிப்புகளால், பயணியர் நடந்து செல்லவே இடமின்றி தவிக்கின்றனர். பிரதான சாலையிலிருந்து கடற்கரை சென்று திரும்ப, தனிப்பாதை இல்லை.

கோவில் வளாகத்தை ஒட்டியுள்ள குறுகிய மண் பாதையில் பயணியர் கடந்து, கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறுகின்றனர். கோவில் வளாக பகுதியிலிருந்து, நேரடியாக கடற்கரை செல்லவும் பாதையின்றி, மண் பாதை வழியே சென்றுதிண்டாடுகின்றனர்.

சுற்றுலா சூழலுக்கேற்ப, கடற்கரை பகுதியை மேம்படுத்தும் அவசியம் குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் 'சுவதேஷ் தர்ஷன்' மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், அத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஆக்கிரமிப்பு வியாபாரிகள், சுற்றுலா கடற்கரை பகுதி துாய்மையில் சிறிதும் அக்கறையின்றி சீரழிக்கின்றனர்.

தற்போது, கடற்கரை பகுதியில், 30 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, 'சுவதேஷ் தர்ஷன் - 2.0' மேம்பாட்டு திட்டத்தை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மார்ச் 7ம் தேதி துவக்கினார். மூன்று மாதங்கள் கடந்தும், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இப்பகுதியில் பெருகிவரும் வியாபார ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடற்கரை கோவில் பகுதி மேம்பாட்டு திட்டங்கள்


 பல்லவர் சிற்பக்கலைகள் வடிவமைப்பில் நுழைவாயில் - 38.5 லட்சம் ரூபாய்
 பயணியர் வருகை, கூடுமிடம், நடைபாதை மற்றும் புல்வெளி வளாகம் - 2.75 கோடி ரூபாய்
 சுற்றுலா வாகனங்கள் நிறுத்த சுங்க கட்டண மையங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக இடம், 'சிசிடிவி'க்கள் ஆகியவற்றுடன் நிறுத்துமிடம், புல்வெளி வளாகம் - 6 கோடி ரூபாய்
 ஆண், பெண் கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வடிவமைப்பு கழிப்பறைகள், பாதுகாவலர் அறைகள், குழந்தை பாலுாட்டும் அறை - 94 லட்சம் ரூபாய்
 'சிசிடிவி' கட்டுப்பாடு, முதலுதவி சிகிச்சை ஆகியவற்றுக்கு கன்டெய்னர் அறைகள் - 24 லட்சம் ரூபாய்
 தொல்லியல் நுழைவுச்சீட்டு மையம், பயணியர் வரவேற்பகம், வழிகாட்டி அறை, ஊழியர் அறை, பொருட்கள் இருப்பு அறை, கலையம்ச பதாகைகள், கூடத்தில் ஒளி - ஒலி சாதன அமைப்புகள், பாரம்பரிய சூழலை பறைசாற்றும் அம்சங்கள், சாய்வுதளம் ஆகியவற்றுடன் கருத்தியல் கூடம் - 5.16 கோடி ரூபாய்
 பாரம்பரிய சூழல் தன்மையுடன் சிற்றுண்டி விடுதி மற்றும் கையேடுகள், புத்தகங்கள் விற்பனையக வளாகம் - 86 லட்சம் ரூபாய்
 கடற்கரையில் அலங்கார நடைபாதை, கன்டெய்னர் கழிப்பறைகள், உடைமாற்றும் அறை, கண்காணிப்பு கோபுரம் - 50.5 லட்சம் ரூபாய்
 ஸ்தலசயன பெருமாள் கோவில் திருக்குள வளாகத்தில், நடைபாதை, மின்விளக்கு, பயணியர் வசதிகள் - 75 லட்சம் ரூபாய்
 கடற்கரை சாலை பகுதியில், நடைபாதை, வடிகால்வாய், தெருவிளக்குகள் - 3.20 கோடி ரூபாய்
 கடைகள் முன்புற பகுதியில் சுற்றுச்சுவர், கம்பி தடுப்பு, புல்வெளி - 1.90 கோடி ரூபாய்
 மின் கம்பங்கள், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் - 1.52 கோடி ரூபாய்








      Dinamalar
      Follow us