/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'டிட்வா' புயலால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புரசை, கொளத்துார், மாதவரத்தில் பாதிப்பு
/
'டிட்வா' புயலால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புரசை, கொளத்துார், மாதவரத்தில் பாதிப்பு
'டிட்வா' புயலால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புரசை, கொளத்துார், மாதவரத்தில் பாதிப்பு
'டிட்வா' புயலால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புரசை, கொளத்துார், மாதவரத்தில் பாதிப்பு
ADDED : டிச 03, 2025 06:15 AM

சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.
வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பழுது சீரமைப்பு
மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் - செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
கொளத்துார், பெரம்பூர் பகுதிகளில் மோட்டார் வாயிலாக கால்வாயிலும், பள்ளமான சாலையில் இருந்து மேடான பகுதிக்கும் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டது.
தவிர, வெள்ள நீரை ஓட்டேரி நல்லான் கால்வாயிலேயே அதிகப்படியாக வெளியேற்றியதால், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
கொளத்துார் ஜி.கே.எம்., காலனி, கதிர்வேடு, ரெட்டேரி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதிகளிலும், சாலை முழுதும் மழைநீர் தேங்கியிருந்தது.
சென்னை மாநகராட்சியில், ஆண்டுதோறும் ஏற்படும் மழைக்கால பாதிப்புகளை தடுக்க, அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சிகளில், தலா 4,000 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஆண்டுதோறும் இணைப்பு வடிகால்வாய், பழுது சீரமைப்பு, துார்வாரும் பணிக்காக, 30 கோடி முதல் 60 கோடி ரூபாய் வரை என, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி செலவிட்டு வருகிறது.
இவ்வளவு பணிகள் நடந்தாலும், சென்னை மாநகராட்சியின் வடிகால்வாய்களில் மழைநீர் செல்வதில்லை.
1,496 மோட்டார்கள்
அதனால், இந்தாண்டு மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க, இரு மாதங்களுக்கு முன்னரே, வாடகை அடிப்படையில், 1,496 மோட்டார்கள் ஒப்பந்தம் வாயிலாக எடுக்கப்பட்டன. அவை, அதிக தண்ணீர் தேங்கும் சுரங்கப்பாதைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டன.
இவற்றின் வாயிலாகவே மாநகராட்சி பணியாளர்கள், நீரை வெளியேற்றி வருகின்றனர்.
- நமது நிருபர் -

