/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொன்மார் ஊராட்சியில் புது ஆரம்ப சுகாதார நிலையம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்தார்
/
பொன்மார் ஊராட்சியில் புது ஆரம்ப சுகாதார நிலையம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்தார்
பொன்மார் ஊராட்சியில் புது ஆரம்ப சுகாதார நிலையம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்தார்
பொன்மார் ஊராட்சியில் புது ஆரம்ப சுகாதார நிலையம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்தார்
ADDED : ஜூலை 04, 2025 01:50 AM

திருப்போரூர்:பொன்மார் ஊராட்சியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று திறந்து வைத்தார்.
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மருத்துவ சிகிச்சைக்கு, அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு, 10 கி.மீ., துாரத்தில் உள்ள கேளம்பாக்கம் செல்ல வேண்டும்.
மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இதனால், கர்ப்பிணியர் மற்றும் முதியோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொன்மார் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில், மாநில அரசின் வேண்டுகோளின்படி, புதிதாக 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், மத்திய அரசு 2023ல் அனுமதி வழங்கியது.
இதற்காக, 40 சதவீத நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, தமிழக அரசின் 60 சதவீத நிதியுடன், 2023-- 2024ம் நிதியாண்டில் தலா, 1.20 கோடி ரூபாய் மதிப்பில், 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், 'பொன்மார் ஊராட்சியிலும் மருத்துவமனை அமைக்கப்படும்' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.
இதையடுத்து, பொன்மார் ஊராட்சியில் சுகாதார திட்டத்தின் கீழ், 1.2 கோடி ரூபாயில், புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கான பணி, ஓராண்டுக்கு முன் துவக்கப்பட்டது.
புறநோயாளிகள் அறை, உள்நோயாளிகள் அறை, ஆய்வகம், மருந்தகம், கழிப்பறை, சேமிப்பு கிடங்கு என, தனித்தனி அறைகள் வசதியுடன், அனைத்து கட்டுமான பணிகளும் முடிவடைந்த நிலையில், இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.
முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் மூலமாக, மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார்.
விழாவில், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஊராட்சி தலைவர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மருத்துவர், செவிலியர், உதவியாளர், மருந்தாளர் என, 10 பேர் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்றிலிருந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் செயல்பாடும் துவக்கப்பட்டது. நேற்று 50க்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக சிகிச்சைக்கு வந்தனர்.