/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடநெருக்கடியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலம்
/
இடநெருக்கடியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலம்
இடநெருக்கடியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலம்
இடநெருக்கடியில் செயல்படும் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலம்
ADDED : ஏப் 07, 2025 12:10 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்தின் கீழ், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 163 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்தின் கீழ் திட்ட அலுவலர், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் என 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், 98 சதவீதம் பெண்பணியாளர்களே பணிபுரிகின்றனர்.
இதன் கீழ் இயங்கும் அங்கன்வாடி மூலம் 6 வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரம்ப கல்வி கற்பித்தல், குழந்தைகளை பாதுகாத்தல், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து சுகாதாரம் போன்ற சேவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், கடந்த 1986 அமைக்கப்பட்டது. இக்கட்டடம் சிதிலமடைந்து பயன்படுத்தமுடியாத நிலைக்கு மாறியதால், பழைய வேளாண் கட்டடத்துக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.
தற்போது இங்கு, போதிய இடவசதி இல்லை. அதேபோல், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை. கூடுதலாக ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு வருபவர்களுக்கும் இடவசதி இல்லை.
மாதாந்திர கூட்டம் போன்ற முக்கிய பணிகளின்போது ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் குவியும்போது போதிய கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் அருகே உள்ள பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சென்று சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு விசாலமான புதிய கட்டடத்தை விரைவில் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதுவரை தற்போது உள்ள கட்டடத்தில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.