/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 கிலோ கஞ்சாவுடன் கோவை வாலிபர் கைது
/
3 கிலோ கஞ்சாவுடன் கோவை வாலிபர் கைது
ADDED : பிப் 18, 2025 11:50 PM

ஊரப்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த கோவை இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரப்பாக்கம் மற்றும் சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர்ந்து, இளைஞர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்த போது, அவர் பெயர் கார்த்தி தீபக், 24, என்பதும், கோவை, பாரதியார் பல்கலை, ஐ.ஓ.பி., காலனியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி, ஊரப்பாக்கம் சுற்றுப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நேற்று முன் தினம் இரவு சிறையில் அடைத்தனர்.

