
பாதியில் நிற்கும் வடிகால் பணி பெருமாட்டுநல்லுாரில் அவதி
பெருமாட்டுநல்லுார் கூட்டு சாலை, நெல்லிக்குப்பம் நெடுஞ்சாலையில், சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழையால் அதிகமான மழைநீர் தேங்கி இருந்தது.
அதனால், சாலையின் அருகில் இருந்த மழைநீர் வடிகால்வாயை அகலப்படுத்தி, மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது.
மழைநீர் வெளியேறியவுடன், வடிகால்வாயை அகலப்படுத்தும் பணியை, நெடுஞ்சாலை துறையினர் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, வடிகால்வாய் பணியை மீண்டும் துவக்கி, விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சரவணன்,
பெருமாட்டுநல்லுார்.
செங்கை அரசு மருத்துவமனையில் பார்க்கிங் அமைக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தோரும் சாலை விபத்து, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
அவர்கள் கொண்டுவரும் வாகனங்கள், ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இப்பகுதியில், பாதுகாப்பு வசதி இல்லாததால், இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.
இதை தடுக்க, மருத்துவமனை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' அமைக்க, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், மணப்பாக்கம்.
ரயில்வே கேட் பகுதியில் போலீசார் ரோந்து செல்வரா?
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாகவே, தினமும் ரயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.
மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், அருகில் உள்ள புதர்களில் இருந்து, மர்ம நபர்கள் ஒலி எழுப்பி அச்சுறுத்துகின்றனர். சில இளைஞர்கள் கிண்டல் செய்து வம்பிழுக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன், தனியே சென்ற பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞரை, மக்கள் மடக்கி பிடித்து மறைமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இப்பகுதியில் நடந்து செல்லவே பயமாக உள்ளது. எனவே, இந்த பகுதியில், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.
- விஜயலட்சுமி, திருக்கச்சூர்.
பிரணவமலை அடிவாரத்தில் சாய்ந்த மரத்தை அகற்ற கோரிக்கை
திருப்போரூர் பிரணவமலையில், கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர்.
கோவில் அடிவாரத்தில், மிக்ஜாம் புயலால் மரம் வேரோடு சாய்ந்தது. இது பக்தர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே, மரத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கிருஷ்ணமூர்த்தி,
திருப்போரூர்.