
பூயிலுப்பையில் பாழடைந்துள்ள
கிணற்றை மூட வேண்டுகோள்
திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமம், கெங்கையம்மன் கோவில் தெருவில், பொது கிணறு உள்ளது. இந்த கிணறு, 20 ஆண்டுகளுக்கு மேலாக, பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டி மாசடைந்துள்ளது. மேலும், கிணற்று நீர் உவர்ப்படைந்து வருகிறது.
இந்த கிணற்றை சுற்றியுள்ள குடியிருப்புகளை சேர்ந்த சிறுவர்கள், கிணற்றின் அருகில் விளையாடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, பயன்பாடு இல்லாத இந்த கிணற்றை துார்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.விக்னேஷ், கரும்பாக்கம்.
முடிச்சூரில் நாய்கள் தொல்லை
கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுவாமி நகர் முதல் பிரதான சாலையில், இருபதுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.
காலையில் இருந்து இரவு வரை, அப்பகுதிவாசிகளுக்கு இடையூறாக குறைத்துக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் சாலையில் சுற்றித் திரிகின்றன.
இதனால், இரவு நேரத்தில், இந்த சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள், அச்சத்தில் அடிக்கடி சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ -- மாணவியரும், சிறுவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து முடிச்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.லட்சுமிநாராயண கணபதி, முடிச்சூர்.
தென்னேரிப்பட்டு சாலை ஓரத்தில்
சேதமடைந்த மின் கம்பத்தால் ஆபத்து
சித்தாமூர் அருகே போந்துார் சாலை சந்திப்பில் இருந்து, தென்னேரிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில், வயல்வெளி பகுதியில் உள்ள மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவை அமைத்து பல ஆண்டுகள் ஆனதாலும், உரிய பராமரிப்பு இல்லாததாலும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன.
விபத்து ஏற்படும் அபாய நிலையில் மின் கம்பங்கள் உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வே.கிருஷ்ணன், சித்தாமூர்.
பாதாள சாக்கடை மூடி உடைந்து
மறைமலை நகர் சாலையில் பள்ளம்
மறைமலை நகர் நகராட்சி, காமராஜர் சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, இரவில் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. மேலும், பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே, இவற்றை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.ஹரிஹரன், மறைமலை நகர்.
எச்சரிக்கை கோடு இல்லாத
வேகத்தடையால் விபத்து அபாயம்
கூவத்துார் அடுத்த கடலுாரில், காத்தங்கடை செல்லும் சாலை உள்ளது. இதில், தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில், வாகனம் வேகமாக செல்வதை தடுக்க, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில், வெண்மை அடையாள கோடுகள் இடாமல், வெறுமனே உள்ளது. இதனால், அச்சாலையில் கடக்கும் வாகனங்கள், வேகத்தடையை அறிய இயலாமல் தடுமாறுகின்றன. எனவே, வேகத்தடை மீது வெண்மை அடையாள கோடு இட வேண்டும்.
கே.பாண்டுரங்கன், கூவத்துார்.

