/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லத்துார் ஒன்றிய துணை தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதில் குழப்பம்
/
லத்துார் ஒன்றிய துணை தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதில் குழப்பம்
லத்துார் ஒன்றிய துணை தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதில் குழப்பம்
லத்துார் ஒன்றிய துணை தலைவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதில் குழப்பம்
ADDED : மார் 07, 2024 12:40 AM

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில், 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர். 2021ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் 10 கவுன்சிலர்களும், அ.தி.மு.க., சார்பில் 5 கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர்.
பின், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் பாபுவின் மனைவி சுபலட்சுமி ஒன்றியக் குழு தலைவராகவும், கிருஷ்ணவேணி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பதவிகள் காலி
நாளடைவில், ஒன்றியக்குழு தலைவர் மீது ஒரு சில கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருந்தனர். அவர்களை தன்பக்கம் இழுத்து, ஒன்றியக் குழுவை கலைக்க தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரன் முயற்சி செய்தார்.
தொடர்ந்து, தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அக்.,13ம் தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
பின், லத்துார் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணை தலைவர் நீக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது. காலியான பதவிகளுக்கு, மார்ச் 6ம் தேதி காலை 10:30 மணிக்கு தேர்தல் நடக்க உள்ளதாக, கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என, முன்னாள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 'ரிட்' வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''பொதுமக்களின் நலன் கருதி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது. ஆனால், தேர்தல் முடிவுகளை வழக்கு முடிந்த பின் தெரிவிக்கப்படும்,'' என, உத்தரவிட்டார்.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று தேர்தல் நடந்தது. காலை 10:30 மணிக்கு ஒன்றிய தலைவருக்கான தேர்தல் துவங்கியது.
போட்டியின்றி வெற்றி
அதில் போட்டியிட தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரன் மனைவி சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, துணைத் தலைவரை தேர்வு செய்வதில், கவுன்சிலர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. பின், அதுகுறித்து ராமச்சந்திரன் வீட்டில் கவுன்சிலர்கள் இடையே பேச்சு நடத்தப்பட்டது.
இதில், கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. பின், மதியம் 2:30 மணிக்கு துணைத் தலைவர் தேர்தல் நடந்தது.
இதில், ஒன்றாவது வார்டு கவுன்சிலர் சீனுவாசன், எட்டாவது வார்டு கவுன்சிலர் சுஜாதா மற்றும் 10வது வார்டு கவுன்சிலர் சித்ரா ஆகியோர், வேட்பு மனு தாக்கல் செய்ய விருப்ப மனு பெற்றனர்.
கூச்சல்
முதலில் சித்ரா வேட்பு மனு தாக்கல் செய்ததும், தேர்தல் அறிவிப்பு வெளியிடுவது குறித்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, வேட்பு மனு தாக்கல் செய்த ஆவணத்தை தேர்தல் அதிகாரி 'சீல்' வைத்தார்.
அதன்பின், எட்டாவது வார்டு கவுன்சிலர் சுஜாதா வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்றபோது, 'காலம் கடந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்த ஆவணம் 'சீல்' வைக்கப்பட்டது. ஆகையால், உங்களது வேட்பு மனுவை பெற முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
அதனால், தேர்தல் நடந்த அறையில் இருந்து வெளியேறிய கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அதிகாரிகளுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
நீதிமன்ற வழக்கு முடிந்த பின், ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

