/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடுவதில் குழப்பம் 'டெண்டர்' விட்ட நிலையில் சென்னை மாநகராட்சி மறுபரிசீலனை
/
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடுவதில் குழப்பம் 'டெண்டர்' விட்ட நிலையில் சென்னை மாநகராட்சி மறுபரிசீலனை
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடுவதில் குழப்பம் 'டெண்டர்' விட்ட நிலையில் சென்னை மாநகராட்சி மறுபரிசீலனை
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடுவதில் குழப்பம் 'டெண்டர்' விட்ட நிலையில் சென்னை மாநகராட்சி மறுபரிசீலனை
ADDED : ஜன 27, 2025 11:09 PM
சென்னை, சென்னை மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு 'டெண்டர்' விட்டுள்ள நிலையில், பலதரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா அல்லது மாநகராட்சியே நடத்துவதா என்பதை மறுபரிசீலனை செய்வதாக, மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை, 2023ல் தமிழக அரசு அமல்படுத்தியது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையின் கீழ் இயங்கும், 356 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 49,147 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதற்காக, 35 ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
காலை சிற்றுண்டி திட்டத்தில் ஒரு மாணவருக்கு, தினமும் வழங்கப்படும் உணவுக்கான மூலப்பொருட்களின் அளவு, 50 கிராம் அரிசி அல்லது அதே அளவு ரவை அல்லது கோதுமை அல்லது சேமியாவாக இருக்க வேண்டும்.
அந்தந்த ஊர்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம், உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள் வழங்க வேண்டும்.
குறிப்பாக, சமைத்த பின் 150 முதல் 200 கிராம் உணவு, 60 மில்லி கிராம் காய்கறியுடன் கூடிய சாம்பார் கட்டாயம் வழங்க வேண்டும்.
இந்த வகையிலான காலை சிற்றுண்டி திட்டத்தால், அரசு பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வந்த ரத்தசோகை பாதிப்பு குறைந்திருப்பதாக, பல்வேறு ஆய்வுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ஓராண்டு காலம் இதை தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில், கடந்தாண்டு டிச., மாதம், மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
தொடர்ந்து, காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் மேற்கொள்ளும் வகையில், மூன்று வட்டாரங்களாக பிரித்து, 13.73 கோடி ரூபாய் மதிப்பில், 49,147 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வகையில், 'டெண்டர்' அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒப்பந்தம் பெறுவோர், உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாநகராட்சி ஒதுக்கிய கட்டடங்களில், சுகாதாரமான முறையில் சமையற்கூடங்களை அமைத்து பராமரிக்க வேண்டும்.
மாநகராட்சி சார்பில் கட்டடங்கள், தண்ணீர், மின்சாரம், எரிவாயு போன்ற உட்கட்டமைப்புகள் வழங்கப்படும். அதற்கான கட்டணங்களை ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டும்.
வாங்கும் உணவு பொருட்களுக்கான விலை மதிப்பு ஆவணங்களை, ஜி.எஸ்.டி.,யுடன் பெற்று பராமரிப்பதுடன், குப்பையை முறையாக பராமரிக்க வேண்டும்.
அத்துடன், மொபைல் செயலி வாயிலாக, உணவு பொருட்கள் முறையாக பள்ளிகளுக்கு செல்கின்றனவா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் இந்த முடிவுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., பொது செயலர் தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்தால், குறிப்பிட்ட நேரத்தில் உணவு பொருட்கள் செல்வதில் தாமதம் ஏற்படலாம். அதனால், மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம் பாதிக்கப்படும் என, பலரும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி மேயர் பிரியா கூறியதாவது:
மாநகராட்சியில் தற்போது வரை, காலை சிற்றுண்டி திட்டத்தை மாநகராட்சி தான் செயல்படுத்தி வருகிறது. அதேநேரம், தனியார் ஒப்பந்தத்தில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், மாநகராட்சி அதிகாரிகள் தினமும் கண்காணிப்பர்.
குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா, உணவின் தரம், அளவு உள்ளிட்டவை அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தவறு நடந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அதேநேரம், அரசின் ஆலோசனைக்கு ஏற்ப, காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு டெண்டர் விடும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் குழு அச்சம்
மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது:
இத்திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலை இழப்பால் பொருளாதார சிக்கல் ஏற்படும். இந்த வேலை பறிபோகும் நிலையில், 'அம்மா' உணவகத்தில் வாய்ப்பு தர வேண்டும்.
அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பணி செய்து வருகிறோம். தனியாரிடம் விட்டாலும், தற்போது உள்ளவர்களையே பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமையலர் கூறுகையில், 'தற்போது, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், ரேஷனில் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. உணவு சமைக்க தேவையான காய்கறிகள் வழங்கப்படுகின்றன. தனியார் வசம் ஒப்படைக்கும் நிலையில், தரமற்ற மற்றும் விலை குறைவான பொருட்கள் வாங்கி உணவு தயார் செய்ய வாய்ப்பு உள்ளது' என்றனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவை, 'அம்மா' உணவகங்கள் உள்ளிட்ட மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர். அதனால், குழந்தைகளுக்கு ஓரளவு தாமதமின்றி உணவு கிடைக்கிறது. ஆனால், இப்போது சென்னையில் 356 பள்ளிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம், மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. மொத்தம் 35 மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் காலை உணவை தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 11 பள்ளிகளுக்கு ஓர் இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டால், அதை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாகும். அதனால் குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாகவும் உணவு கிடைக்காத நிலை உருவாகும். இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,