/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் பூங்கா வளாகத்தில் கட்டுமானம் தீவிரம்
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் பூங்கா வளாகத்தில் கட்டுமானம் தீவிரம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் பூங்கா வளாகத்தில் கட்டுமானம் தீவிரம்
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம் பூங்கா வளாகத்தில் கட்டுமானம் தீவிரம்
ADDED : நவ 03, 2024 12:31 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்திற்கு, புதிதாக கட்டப்படும் அலுவலக கட்டட கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில், பேரூராட்சி அலுவலகம், பழமையான கட்டடத்தில் இயங்குகிறது. இக்கட்டடம், கடந்த 1970ல், அன்றைய சூழலுக்கேற்ப கட்டப்பட்டது. அதன் கீழ்தளத்தில், செயல் அலுவலர், பிற ஊழியர்களுக்கு, குறுகிய அறைகளே இருந்தன.
மேல்தளத்தில் மன்ற கூடமும் குறுகியதாக இருந்தது. அலுவலர்கள் இடநெருக்கடியில் பணிபுரிந்தனர். மன்ற கூட்டம் நடத்த, விசாலமான அரங்கம் இன்றி, உறுப்பினர்கள், நெருக்கியடித்து அமர்ந்தனர்.
சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்டவை தொடர்பான குறைகளுக்கு விளக்கம் பெற, அலுவலகம் செல்லும் பொதுமக்கள் காத்திருக்க இடமில்லாத நிலை இருந்தது. பழைய கட்டடம் என்பதால் பலமிழந்துள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்போதைய அவசியம் கருதி, புதிய கட்டடம் கட்ட மன்றத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, புதிய கட்டடம் கட்ட, 2024 - 25 மூலதன மானிய திட்டத்தில், 1.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தற்போதைய அலுவலக பகுதி போதிய இடவசதி இன்றி குறுகியதாக உள்ளதால், இப்பகுதி தவிர்க்கப்பட்டது. அங்கிருந்து, 200 மீ., தொலைவில், பழைய வளம்மீட்பு பூங்கா வளாகத்தில் கட்டடம் கட்ட முடிவெடுத்து, கடந்த ஆக.,ல் பூமிபூஜையுடன் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கீழ்தள கட்டுமானம் பணிகள் முடிக்கப்பட்டு, மேல்தள கட்டுமானப் பணிகள் துவக்கப்படவுள்ளது. 1,797 சதுர அடி பரப்பில் அமையும் கீழ்தளத்தில் செயல் அலுவலர், கணினி, பதிவேடு ஆகிய தனித்தனி அறைகள், இரண்டு அலுவலக கூடங்கள், கழிப்பறைகள் ஆகியவை இடம்பெறும். 1,443 ச.அடி., பரப்பில் அமையும் மேல்தளத்தில், மன்ற தலைவர் அறை, மன்ற கூட்டரங்கம், இன்ஜினியர் அறை, காத்திருப்போர் கூடம் ஆகியவை இடம்பெறும்.