ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு
ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி கட்டட தொழிலாளி உயிரிழப்பு
ADDED : ஆக 20, 2026 06:12 PM
மறைமலைநகர்: மறைமலைநகரில் ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதிய விபத்தில், 48 வயது கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 48; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., ஸ்கூட்டரில் மறைமலைநகர் நோக்கி சென்றார். ஆப்பூர்- சாமியார் கேட் சாலையில் சென்ற போது, எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஆறுமுகத்தின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில், படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறு காயங்களுடன் தப்பிய ஆட்டோவை ஓட்டி வந்த பேரமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 38, என்பவரை, சக வாகன ஓட்டிகள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார், ஆறுமுகம் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
