/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
/
புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
புறநகர் ஊராட்சிகளில் தொடரும் நிலத்தடி நீர் திருட்டு சில ஆண்டுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
ADDED : ஜூன் 09, 2025 01:46 AM

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியை ஒட்டி, பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வேங்கைவாசல், நன்மங்கலம் உள்ளிட்ட, 15 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் வரை, விவசாயம் செழிப்பாக இருந்தது.
நகரமயமாதல் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியால், இப்பகுதிகளில் விவசாயம் பெருமளவு குறைந்தது. எனினும், இக்கிராமங்களில், விவசாய கிணறுகள் இன்றும் அப்படியே உள்ளன.
இந்த கிணறுகளில் இருந்து, பல ஆண்டுகளாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து, டேங்கர் லாரிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் விற்கும் பணியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக, நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு, பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த கிராம மக்களுக்கே அடிப்படை தேவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலைமை உருவாகி, பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நாட்களாக, இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்துள்ளது.
எனினும், இதே நிலைமை நீடித்தால், வேங்கைவாசல் மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளில், அடுத்த சில ஆண்டுகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, இப்பகுதிவாசிகள் வெளி இடங்களில் தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்படும்.
அதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இக்கிராமங்களை காப்பாற்ற முடியும்.
இது குறித்து, தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்க மாநில செயலர் ஜி.தினகரன், 43, கூறியதாவது:
விவசாய கிணறுகளில் இருந்து வணிக ரீதியான பயன்பாட்டிற்கு, தண்ணீர் எடுக்கக்கூடாது என, நீதிமன்ற தீர்ப்பே உள்ளது. தண்ணீர் திருடும் நபர்கள் மீது, திருட்டு வழக்கு பதிவு செய்யுமாறும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதையும் மீறி, வேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ்வொரு கிணறுகளில் இருந்தும், நாள் ஒன்றுக்கு, 10 லோடு தண்ணீர் திருடுகின்றனர்.
நீர்வளம், போலீஸ், வருவாய் துறையினருக்கு தெரிந்து தான் திருட்டு நடக்கிறது. அவர்கள், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், துணைபோகின்றனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் முதல் தலைமை செயலர் வரை, எத்தனையோ முறை மனு கொடுத்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்படியே போனால், வளர்ந்து வரும் இப்பகுதிகளில், அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.
இவ்வாறு அவர் கூறினார்.