/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
ADDED : ஏப் 21, 2025 11:57 PM

மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டத்தில், நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணம் செய்யும் சூழல் நீடிக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள் சிலர், தங்களின் கால்நடைகளை முறையாக வீட்டில் கட்டி பராமரிக்காமல், சாலைகளில் திரிய விடுகின்றனர்.
கால்நடைகளில் குறிப்பாக மாடுகள் அதிக அளவில், 24 மணி நேரமும் சாலைகளில் சுற்றித் திரிவதுடன், அங்கேயே படுத்து ஓய்வெடுக்கின்றன.
செங்கல்பட்டு நகர பகுதிகள், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலையை ஒட்டி பூ மற்றும் காய்கறி கடைகள் அதிக அளவில் உள்ளன.
இங்குள்ள உணவுப்பொருட்களை உண்ண வரும் மாடுகளை, கடையின் உரிமையாளர்கள் துரத்துகின்றனர். அப்போது, மாடுகள் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சப் -- கலெக்டர் அலுவலகம், திருப்போரூர் -- கூடுவாஞ்சேரி சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் திருக்கச்சூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற பெண், மாடு குறுக்கே சென்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.
கடந்தாண்டு ஜூலையில், மறைமலைநகர் நகராட்சி பகுதியில் முதியவரை மாடு முட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து அடைக்க, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் கிராமத்தில் மாடுகளுக்கான பட்டி அமைக்கப்பட்டது.
இங்கு, நுாறு நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள், மாடுகளுக்கு தீவனம், தண்ணீர் வைத்து பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.
தற்போது இந்த மாட்டுப்பட்டி, நீண்ட நாட்களாக பூட்டியே உள்ளது.
இங்கு பணிபுரிந்த பெண்கள், ஓராண்டில் நுாறு நாட்கள் மட்டுமே பராமரிப்பு பணி செய்கின்றனர். இதனால், மற்ற நாட்களில் பட்டியை முறையாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சாலையில் பிடிக்கும் மாடுகளை பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க முயலும் போது, மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு உள்ளது.
அதே நேரத்தில், மாடுகளால் விபத்து சம்பவங்கள் ஏற்படும் போது, உள்ளாட்சி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். மாடுகளைப் பிடிக்கச் செல்லும் ஊழியர்களிடம், மாடுகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், செய்வதறியாமல் தவிக்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.