UPDATED : செப் 16, 2026 06:00 PM
ADDED : செப் 16, 2026 05:02 PM

பவுஞ்சூர்:வடக்கு வாயலுார் ஊராட்சியில் உள்ள தொட்டியில் தண்ணீர் இல்லாததால், தாகம் தீர்க்க வரும் மாடுகள் தண்ணீர் தேடி அலைகின்றன.
பவுஞ்சூர் அருகே வடக்கு வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட, வடக் குவாயலுார், கருப்பூர், மாவடி போன்ற பகுதிகளில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
குறிப்பாக மாவடி, கருப்பூர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் 2,000த்திற்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
கோடை காலத்தில் கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், கருப்பூர் திரவுபதி அம்மன் கோவில் அருகே, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த தொட்டிக்கு, மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் நிரப்பபட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. இதனால், தாகம் தீர்க்க வரும் மாடுகள், குடிநீரின்றி நீண்ட துாரம் தண்ணீரை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாடுகள் தாகம் தீர்க்கவும், ஆபத்தான முறையில் நீர்நிலைப் பகுதிகளில் இறங்குவதை தவிர்க்கவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
