UPDATED : ஜூலை 15, 2026 07:31 PM
ADDED : ஜூலை 15, 2026 07:23 PM
பல்லாவரம்: பல்லாவரம், மங்கலபுரத்தில் தன் வீட்டு முன் நின்றிருந்த அருண்பாண்டி, 50, என்பவரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழரசன், 30, மது அருந்த 100 ரூபாய் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், பைக்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, பெட்ரோல் குண்டு தயாரித்து அருண்பாண்டி வீட்டின் மீது, நேற்று முன்தினம் இரவு தமிழரசன் வீசினார். பலத்த சத்தத்துடன் வெடித்தது; யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல்லாவரம் போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.
கார் கண்ணாடியை உடைத்து ரூ.7 லட்சம் 'அபேஸ்'
தாம்பரம்: தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோவில் முதல் தெருவில் வசிக்கும் மத்தியாஸ் பீட்டர் ஆண்டனி, 46, தன் 'டாடா பன்ச்' காரில் ஏழு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். நேற்று முன்தினம், தாம்பரம் அருகே டீ குடித்துவிட்டு வருவதற்குள், கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள் திருடியுள்ளனர். வீடு விற்ற பணம் என, தாம்பரம் போலீசில் தெரிவித்தார்; போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரியில் சிக்கி ஓட்டுநர் பலி
குன்றத்துார்: சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டைக்கு, 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் ஹரிஷ்பாப, 45, கன்டெய்னர் லாரியை முந்த முயன்று தடுமாறி விழுந்ததில், லாரி டயரில் சிக்கி இறந்தார். டயரில் இருந்து உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் உதவியுடன் லாரியை துாக்கி, உடல் மீட்கப்பட்டது.
மதுக்கூடத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் ஒரு குவார்ட்டர் மது பாட்டில் வாங்கி, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த இருவரை தேடி, பலரும் வந்து சென்றுள்ளனர்.
தகவலின்படி அங்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில், இருவரும் கஞ்சா விற்றது தெரிய வந்தது. செம்மஞ்சேரியைச் சேர்ந்த காமேஸ்வரன், 25, லோகேஷ், 26, ஆகியோரை கைது செய்து போலீசார், 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
