/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை கோவில் நிலத்தில் 200 ஏக்கரில்...கலாசார பூங்கா!:வருவாயை பகிர்ந்துகொள்ள இரு துறைகள் திட்டம்
/
திருவிடந்தை கோவில் நிலத்தில் 200 ஏக்கரில்...கலாசார பூங்கா!:வருவாயை பகிர்ந்துகொள்ள இரு துறைகள் திட்டம்
திருவிடந்தை கோவில் நிலத்தில் 200 ஏக்கரில்...கலாசார பூங்கா!:வருவாயை பகிர்ந்துகொள்ள இரு துறைகள் திட்டம்
திருவிடந்தை கோவில் நிலத்தில் 200 ஏக்கரில்...கலாசார பூங்கா!:வருவாயை பகிர்ந்துகொள்ள இரு துறைகள் திட்டம்
ADDED : நவ 20, 2024 01:30 AM

மாமல்லபுரம்:சுற்றுலாத்துறை அமைக்கவுள்ள ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவிற்கு, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 218 ஏக்கர் இடத்தை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பூங்காவின் வருமானததை, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைகள் பகிர்ந்து கொள்ள இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழக சுற்றுலாத்துறையின் பொதுத்துறை நிறுவனமாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயங்குகிறது. இதன்கீழ், மாமல்லபுரம், தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில், பயணியர் தங்கும் விடுதிகள் இயங்குகின்றன.
சென்னை முட்டுக்காடு, முதலியார்குப்பம் உள்ளிட்ட இடங்களில், படகு குழாம்களும் இயங்குகின்றன. மேலும், ஆன்மிக சுற்றுலாவும் இப்பகுதிகளில் களைகட்டுகிறது.
இந்தியாவில், உள்நாடு, சர்வதேச பயணியரை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இச்சிறப்பு நிலைக்கவும், சுற்றுலா மேம்படவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விடுதி நடத்துவது, பிற சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை, பொது, தனியார் முதலீட்டு பங்களிப்பில் செயல்படுத்தவும் ஆர்வம் காட்டுகிறது. இம்முறையில், வருவாயை சதவிகித அடிப்படையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், தனியார் நிறுவனமும் பகிர்ந்துகொள்ளும்.
இந்நிலையில், சென்னை அருகில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், ஆன்மிக, கலாசார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கவுள்ளதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருவதாகவும், தமிழக அரசு கடந்த 2022ல் அறிவித்தது.
இப்பூங்கா வளாகத்தை, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்க, சுற்றுலா துறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இங்கு, கோவிலுக்கு சொந்தமான, புல எண் 194/1ல் 181 ஏக்கர், 350ல் 37 ஏக்கர் என, மொத்தம் 218 ஏக்கர் பரப்பில், இப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தையும், தனியார் முதலீட்டு பங்களிப்பு முறையில் செயல்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்நடைமுறையால் கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என, சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பகுதியில் முன்பு, அதே பகுதியினர், நீண்டகாலமாக குத்தகை அடிப்படையில் சவுக்கு பயிரிட்டு வந்தனர். கடந்த 2016ல், காகித தயாரிப்பு மூலப்பொருளான சவுக்கு மரங்கள் வளர்க்க, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது.
அப்பகுதியினர், காகித நிறுவனத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கமான நடைமுறைப்படி, தங்களுக்கே குத்தகைக்கு வழங்குமாறு வலியுறுத்தினர்.
அதனால், காகித ஆலை நிறுவனமும் சவுக்கு பயிரிட இயலாமல், கடந்த எட்டு ஆண்டுகளாக, தரிசு நிலமாக வீணாகிறது. அதனால், அந்நிலம் தொடர்பான காகித ஆலை நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, ஆன்மிக கலாசார பூங்காவிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இப்பூங்கா வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தற்போது வெளியாகியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள நிலம், சென்னை குடிநீர் வாரிய கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு, மாத வாடகை, சில ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் வாடகை உயர்வு என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு அளிக்கும் நித்ய கல்யாண பெருமாள் கோவில் நிலத்திற்கு, மாத வாடகையாக இல்லாமல், கலாசார பூங்கா வாயிலாக கிடைக்கும் வருவாயை பகிரும் அடிப்படையில் பெறப்படுவதாக, கோவில் நிர்வாகிகளிடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதாவது, மாத வாடகை எனில், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படாமல், நிரந்தர வருவாயாகவும், வாடகை உயர்வுடனும் கிடைக்கும் என்றும், வருவாய் பகிர்வு எனில், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அதிகரிப்பால், அதற்கேற்ப கோவில் நிர்வாக பகிர்வும் இருக்கும் எனவும், அறநிலையத் துறையினர் கருதுகின்றனர்.
இதுகுறித்து விபரம் அறிந்த உள்ளூர் மக்கள், கோவில் நிலத்திற்கு மாத வாடகையே அளிக்கவேண்டும் என, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா துறையில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில், நேற்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ''சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கோவிலுக்கு சொந்தமான, 200 ஏக்கர் நிலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில், ஆன்மிக சுற்றுலா மையம் அமைக்கப்படும்,'' என்றார்.