/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் திரியும் மாடுகளால் தினமும் தொல்லை
/
சாலையில் திரியும் மாடுகளால் தினமும் தொல்லை
ADDED : அக் 26, 2025 10:15 PM

மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், உரிமையாளர்கள் முறையாக வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காததால், 24 மணி நேரமும் மாடுகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருவதால், மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையில் மாடுகள் திரிகின்றன.
குறிப்பாக, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சப் -- கலெக்டர் அலுவலகம், திருப்போரூர் -- கூடுவாஞ்சேரி சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்க பெருமாள் கோவில் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை, புழுதிவாக்கம் வழியாக உத்திரமேரூர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இங்கு, புதுப்பட்டு பகுதியில் அதிக அளவில் மாடுகள் சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன.
செய்யூர் அருகே, பவுஞ்சூரில் இருந்து செங்காட்டூர் வழியாக செய்யூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், வடக்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த மாடுகள், சாலையில் சுற்றித் திரிகின்றன. இவை, அம்மனுார், வீரபோகம், சுண்டிவாக்கம் போன்ற பகுதிகளில் வயல்வெளிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்கின்றன.
திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, செங்கல்பட்டு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், மாடுகள் ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளன. குறிப்பாக, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில், மாடுகள் இரவு நேரத்தில் படுத்து ஓய்வெடுக்கின்றன.
அதிக வாகன போக்குவரத்து உள்ள செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலையில், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம், முதலியார்குப்பம், பனையூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து மேய்ச்சலுக்காக செய்யூர் நோக்கிச் செல்லும் மாடுகள், கட்டுப்பாடு இல்லாமல் சாலையில் செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் கால்நடைகள் சாலையில் உறங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
வண்டலுார் அருகே, ஊரப்பாக்கம் ஊராட்சியின் உட்புற தெருக்கள் மட்டுமின்றி, பிரதான வழித்தடமாக உள்ள ஜி.எஸ்.டி., சாலையிலும் மாடுகள் உலா வருவது அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

