/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமாகி அபாய நிலையிலுள்ள மின்கம்பம் மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலையத்தில் பீதி
/
சேதமாகி அபாய நிலையிலுள்ள மின்கம்பம் மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலையத்தில் பீதி
சேதமாகி அபாய நிலையிலுள்ள மின்கம்பம் மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலையத்தில் பீதி
சேதமாகி அபாய நிலையிலுள்ள மின்கம்பம் மதுராந்தகம் தற்காலிக பஸ் நிலையத்தில் பீதி
ADDED : ஏப் 04, 2025 02:10 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் விளக்கு கம்பத்தை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்கு, பயணியரின் நலன் கருதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டது.
நேற்று, தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்து மோதியதில், இந்த மின்விளக்கு கம்பம் அடிப்பகுதியில் உடைந்து, பெயர் பலகையின் மீது சாய்ந்து உள்ளது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மதுராந்தகம் நகர பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலை பகுதியில், கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகத்தினர், சேதமான மின் கம்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின் விளக்கு கம்பம் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

