தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சித்தேரியை புனரமைத்து நடைபாதை அமைக்க முடிவு 25 ஆண்டுகால பிரச்னைக்கு விரைவில் தீர்வு

சித்தேரியை புனரமைத்து நடைபாதை அமைக்க முடிவு 25 ஆண்டுகால பிரச்னைக்கு விரைவில் தீர்வு

சித்தேரியை புனரமைத்து நடைபாதை அமைக்க முடிவு 25 ஆண்டுகால பிரச்னைக்கு விரைவில் தீர்வு


ADDED : ஆக 21, 2026 02:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 02:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வண்டலுார்: வண்டலுாரில் உள்ள சித்தேரியை துார்வாரி, புனரமைத்து, உள்வட்ட பாதையில் நடை பாதை அமைக்கும் பணியை, ‘என்.டி.எஸ்.ஓ.,’ தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுத்துள்ளதால், பொதுமக்களின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறுவதற்கான வழி பிறந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 899.90 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 15 வார்டுகளில், 232 தெருக்களில் 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

சென்னையின் முக்கிய வழித்தடங்களான ஜி.எஸ்.டி., சாலை, கேளம்பாக்கம் சாலை, வெளிவட்ட சாலை, வாலாஜாபாத் சாலை ஆகிய நான்கு சாலைகளும் சங்கமிக்கும் இடமாக வண்டலுார் உள்ளது.

இங்கு, ரயில்வே மேம்பால முடிவில், வாலாஜாபாத் சாலை தொடங்கும் இடத்தில், வடக்கு பகுதியில், சர்வே எண் 159 ‘பி’-ல், 4.98.0 ஹெக்டேர் பரப்பில் சித்தேரி உள்ளது. கழிவு நீர் கலந்து, குப்பை நிறைந்து, அழிவின் விளிம்பில் உள்ள இந்த ஏரியை துார்வாரி, புனரமைத்து, சுற்றிலும் நடைபாதை அமைக்க, கடந்த 25 ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஏரியை புனரமைக்க, வண்டலுாரில் இயங்கி வரும் மெய் அறக்கட்டளை சார்பில் பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இறுதியாக, தமிழகத்தின் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான என்.டி.எஸ்.ஓ., சார்பில், சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப வல்லுநர்கள் வழிகாட்டலில், சித்தேரியை துார்வாரி, புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இதுகுறித்து வண்டலுார் ஊராட்சி தலைவர் முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:

மெய் அறக்கட்டளை தொடர் முயற்சியில், என்.டி.எஸ்.ஓ., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், சென்னை ஐ.ஐ.டி., வல்லுநர் குழுவின் திட்ட வழிகாட்டலில் சித்தேரி புனரமைக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, ஏரியில் கழிவு நீர் கலக்காதபடி, நான்கு எல்லைகளிலும் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்தல், எல்லை பகுதி வரையறை ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில், சென்னை ஐ.ஐ.டி., சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, என்.டி.எஸ்.ஓ., தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.

அதை தொடர்ந்து, ஏரி புனரமைப்பு பணிகளும், உள்வட்ட பரப்பில், நடை பாதை மற்றும் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த பணிக்காக, மாவட்ட, ஒன்றிய நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய ஊராட்சியாக இருந்தாலும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், சிறுவர்கள் பொழுது போக்கவும், வண்டலுாரில், பெரிய அளவிலான பூங்காக்கள் இல்லை.

எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள சித்தேரியை அழிவிலிருந்து மீட்டெடுக்கும்படி, ஏரியை சுற்றி நடைபாதை, பூங்கா அமைக்க, 25 ஆண்டாக கோரிக்கை எழுப்பி வந்தோம்.

தற்போது, சென்னை ஐ.ஐ.டி., அறிஞர்கள் குழுவின் திட்ட மதிப்பீட்டில், என்.டி.எஸ்.ஓ., தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், 25 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us