சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம்இடித்து அகற்றி புதுப்பிக்க வலியுறுத்தல்
சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம்இடித்து அகற்றி புதுப்பிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2026 04:01 PM

அச்சிறுபாக்கம், ஆக. 26–
சிறுபேர்பாண்டி ஊராட்சியில், சிதிலமடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை, இடித்து அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த சிறுபேர்பாண்டி ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் பாபுராயன்பேட்டை, அல்லானுார், சிறுபேர்பாண்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இங்கு பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்க கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது, கிராம நிர்வாக அலுவல கட்டடம் உறுதி தன்மையின்றி, கான்கிரீட் பூச்சு உதிர்ந்து சிதிலமடைந்துள்ளது. இதனால், சேவை கோரி வரும் மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். அதிகாரிகளும் அச்சத்துடன் பணி புரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைகாலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து, ஆவணங்கள் வீணாகின்றன.
எனவே, சிதிலமடைந்துள்ள அலுவலகத்தை இடித்து அகற்றி புதிதாக கட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
