/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொளத்துாருக்கு தனி வி.ஏ.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
/
கொளத்துாருக்கு தனி வி.ஏ.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
கொளத்துாருக்கு தனி வி.ஏ.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
கொளத்துாருக்கு தனி வி.ஏ.ஓ., நியமனம் செய்ய வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 11:55 PM
செய்யூர் :கொளத்துாருக்கு பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதால், வருவாய்த்துறை சார்ந்த சான்றுகள் பெற தாமதம் ஏற்படுகிறது. இதனால், இப்பகுதிக்கு தனி கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை எனும் இ.சி.ஆர்., சாலையில், மாவட்ட எல்லை சோதனைச் சாவடி எதிரே, கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு கோட்டைக்காடு, கொளத்துார், தேன்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு, பள்ளம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களின் வருவாய் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுதா என்பவர், கடந்த ஏப்., 16ம் தேதி பட்டா மாற்றம் செய்ய, 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின், பனையூர் கிராம நிர்வாக அலுவலர், கூடுதல் பொறுப்பாக தற்போது இங்கு பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்காக குழந்தைகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பள்ளி, கல்லுாரி சேர ஜாதி, வருவாய் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற, அதிக அளவில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
மேலும் பட்டா, அடங்கல், வரைபடம் உள்ளிட்ட வருவாய் ஆவணங்கள் பெறவும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, கொளத்துார் பகுதிக்கென தனி கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.