/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் தொடர்ந்து... மெத்தனம் தினமும் சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
/
பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் தொடர்ந்து... மெத்தனம் தினமும் சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் தொடர்ந்து... மெத்தனம் தினமும் சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் தொடர்ந்து... மெத்தனம் தினமும் சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
ADDED : ஜூன் 23, 2025 10:56 PM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் சரிந்து விழுவது, தொடர்கதையாகி வருவதால் பொது மக்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது.
செங்கல்பட்டு -- பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், புற்றீசலாய் தினமும் ராட்சத பேனர்கள் முளைத்து வருகின்றன.
அரசியல் கட்சிகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள், போலீசார் என பலதரப்பினரும், போட்டி போட்டு பேனர்கள், பதாகைகளை அமைத்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் பேனர்கள் வைக்கின்றனர்.
பேனர் வைக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஏற்கனவே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
விளம்பர பேனர்களால், எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படலாம் என, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம்.
ஆனால், கண்துடைப்பிற்காக ஒரு சில பேனர்கள் மட்டும் அகற்றப்படுகின்றன. ஆனால், பேனர் வைக்க பயன்படுத்தும் இரும்பு சட்டங்களை அகற்றுவதில்லை. சில நாட்களில் அதே இடத்தில், அதே இரும்பு சட்டத்தில், வேறொரு நிறுவனத்தின் விளம்பர பேனர் அமைக்கப்படுகிறது.
கடந்த 2019ல், பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததில், சுபஸ்ரீ, 23, என்ற பெண் கீழே விழுந்து, அவர் மீது லாரி ஏறி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடந்த 2021 ஆகஸ்டில், விழுப்புரத்தில் நடந்த தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழாவிற்காக, பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட, 13 வயது சிறுவன் தினேஷ், மின்சாரம் பாய்ந்து பலியானார்.
கடந்த 2023 ஜூன் மாதம், கோவை கருமத்தம்பட்டி, புதுப்பாலம் அருகே, ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில் குமார், குணசேகரன், செந்தில் முருகன் ஆகிய மூவர், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடந்த வாரம், கேளம்பாக்கம், படூர் ஆறு வழிச்சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த, 'பிளக்ஸ் பேனர்' காற்றில் சரிந்து விழுந்ததில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குப்தா, 42, என்பவர் படுகாயம் அடைந்தார்.
மீண்டும், கடந்த 20ம் தேதி நள்ளிரவு, கேளம்பாக்கத்தில் ராட்சத விளம்பர பேனர் காற்றில் சரிந்து, மின் கம்பம் மீது விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபோல் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் நடந்தாலும், பேனர் வைக்கும் கலாசாரம் மட்டும் மாறவே இல்லை. மாறாக, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைபிடிப்பதால், விபத்துகளும் தொடர்கின்றன.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னையின் நுழை வாயிலாக உள்ள செங்கல்பட்டு -- பெருங்களத்துார் இடையிலான 30 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை ஆகிய வழித்தடங்களில், தினமும் பல லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.
தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் நிறைந்துள்ள இந்த சாலைகளின் இருபக்கமும் உள்ள கட்டடங்கள் மீது, பல டன் எடையுள்ள, 300க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
விளம்பர பேனர்களால் கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்கள் மீது மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது.
தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பது மாதந்தோறும் நடக்கிறது.
காற்று பலமாக வீசும் போதும், உறுதித்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழுந்து, விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
எனவே, சாலை ஓரங்களில் வைக்கப்படும் இதுபோன்ற ராட்சத விளம்பர பேனர்களை, இரும்பு சட்டங்களுடன் சேர்த்து முற்றிலுமாக அகற்ற காவல் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலெக்டரிடம் விவசாயிகள் மனு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில்
இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், குடிநீர், சாலை
வசதி, மின் அழுத்த குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 385
மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பின்,
சமூக நலத்துறை சார்பில், ஒழலுார் பகுதியில், 11 திருநங்கையருக்கு இலவச
வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் 16 பேருக்கு, 5.63 லட்சம் ரூபாய்
மதிப்பிலான சிறு, குறு தொழில் கடனுக்கான வங்கிக் கடன் மானியம்
உள்ளிட்டவற்றை கலெக்டர் வழங்கினார்.
விவசாயிகள் மனு:
செங்கல்பட்டு
மாவட்டத்தில், மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், 40
நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல்
செய்யப்பட்டது.
அதன் பின், விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு மீது நடவடிக்கை எடுத்து, பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாயிகளிடம் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.