/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கை காண குவியும் பக்தர்கள்
/
12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கை காண குவியும் பக்தர்கள்
12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கை காண குவியும் பக்தர்கள்
12 ஆண்டுகளுக்கு பின் தோன்றிய சங்கை காண குவியும் பக்தர்கள்
ADDED : மார் 09, 2024 10:48 PM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவிலை, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இங்குள்ள புனித தீர்த்தங்களில், சங்குதீர்த்தகுளம் முக்கியமானது. இத்தல சிவபெருமானை தரிசிக்க, மார்க்கண்டேய முனிவர் குளத்தில் நீராடினார்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்ய, குளத்து தீர்த்தநீரை எடுத்து செல்ல விரும்பினார். அதற்கான பாத்திரம் இன்றி கவலையில் ஆழ்ந்தார். அதற்காக மனமுருகி வேண்டியபோது, அதே குளத்தில் சங்கு தோன்றியது.
அதை இறைவனே தோற்றுவித்ததாக கருதி பரவசமடைந்து, அதில் தீர்த்தநீரை நிரப்பி, சுவாமிக்கு அபிஷேகம் செய்தார்.
உப்புத் தன்மையுள்ள கடல்நீரில் மட்டுமே தோன்றும் இயல்புடைய சங்கு, சங்குதீர்த்தகுள நன்னீரிலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுவது குறிப்பிடத்தக்கது. இந்நுாற்றாண்டில், எட்டு சங்குகள், வலம்புரி, இடம்புரி வகைகளில் தோன்றி, கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.
ஒன்பதாம் சங்காக, மார்ச் 7ம் தேதி காலை குளத்தில் இடம்புரி சங்கு தோன்றியது. கோவில் நிர்வாகத்தினர், குளக்கரை மாசி மண்டபத்தில், அதற்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதையறிந்து, சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர்கள், அந்த சங்கை காண திரண்டனர். பின், வாத்திய முழக்கத்துடன் கொண்டு சென்று, பக்தவசலேஸ்வரர் சன்னிதி முன் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.
முந்தைய எட்டு சங்குகள், உற்சவர்கள் சன்னிதியில் கண்ணாடி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 5 ரூபாய் கட்டணம் செலுத்தி, பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது.
தற்போது தோன்றிய சங்கை, மூலவர் சன்னிதி முன் வைத்து, பக்தர்கள் சில நாட்கள் இலவசமாக தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு, வரிசையில் காத்திருந்து, சங்கு மற்றும் சுவாமியை தரிசித்து பரவசமடைகின்றனர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் பிரியா கூறியதாவது:
வேதகிரீஸ்வரர் அருளால், தற்போதும் சங்கு தோன்றியுள்ளது. அதை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
அவர்கள் வருகை குறையும் வரை, சங்கை அதே இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், உரிய முறையில் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

