கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆவணங்களை காப்பதில் சிரமம்
கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆவணங்களை காப்பதில் சிரமம்
ADDED : மே 21, 2026 03:55 AM

அச்சிறுபாக்கம்: சிறுபேர்பாண்டி ஊராட்சியில், சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வேண்டு மென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த சிறுபேர்பாண்டி ஊராட்சியில் சிறுபேர்பாண்டி, கல்லியங்குணம், அல்லாணுார், பாபுராயன்பேட்டை கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 25 ஆண்டுகளுக்கு முன், சிறுபேர்பாண்டியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது.
தற்போது, இந்த அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் செல்லவே அஞ்சுகின்றனர்.
இதனால், மழை காலங்களில், நீர்க்கசிவு ஏற்பட்டு ஆவணங்கள் மற்றும் கிராம பதிவேடுகளை பாதுகாப்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அங்கு கழிப்பறை வசதி இல்லாததால், அலுவலர்களும் சிரமப்படுகின்றனர்.
எனவே, கிராம நிர்வாக அலுவலர் கட்டடத்தை சீரமைத்து, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
