நெல் விற்றதற்கான ரூ.7.52 கோடி 5 மாதங்களாக நிலுவை அதிருப்தி! விவசாயிகளை அலைக்கழிக்கும் தேசிய கொள்முதல் நிலையம்
நெல் விற்றதற்கான ரூ.7.52 கோடி 5 மாதங்களாக நிலுவை அதிருப்தி! விவசாயிகளை அலைக்கழிக்கும் தேசிய கொள்முதல் நிலையம்
UPDATED : ஆக 19, 2026 08:54 PM
ADDED : ஆக 19, 2026 08:53 PM

செங்கல்பட்டு: நெல் விற்பனை செய்த 472 விவசாயிகளுக்கு 7.52 கோடி ரூபாயை வழங்காமல், ஐந்து மாதங்களாக மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், விவசாயம் தவிர்த்து வேறு வாழ்வாதாரம் இல்லாத நிலையில், கடனில் தத்தளிப்பதாக குமுறுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய மூன்று தாலுகாக்களில், ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக, நெற்பயிர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் என்.சி.சி.எப்., எனும் மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையமும் இணைந்து மாவட்டம் முழுதும் 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, கடந்த பிப்., மாதம் திறந்தது.
இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்திய 134 அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், 2.84 லட்சம் டன் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்தனர். அதை தொடர்ந்து 47,415 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 723.63 கோடி ரூபாய், அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
அதேபோல், பொன்விளைந்தகளத்துார், வீரகுப்பம், தேன்பாக்கம், ஊனமலை, தண்டலம், பெருபேர் கண்டிகை, வையாவூர், கொட்டமேடு, ஆணைக்குன்னம், சூணாம்பேடு, எலப்பாக்கம் உள்ளிட்ட 50 இடங்களில், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் வாயிலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையங்களில் 7,361 விவசாயிகளிடம் இருந்து 71,077 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 182.45 கோடி ரூபாயை, அவர்களது வங்கி கணக்கில் செலுத்தாமல், மத்திய அரசு ஆறு மாதங்களாக இழுத்தடிப்பு செய்தது.
அதைத்தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். விவசாய சங்கங்களும் பலமுறை மனு அளித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், கலெக்டர் வீரப்பனிடம் மனு அளித்தனர். அதன்பின், நிலுவையில் உள்ள பணத்தை விரைந்து வழங்க, அரசுக்கு கலெக்டர் வீரப்பன் அறிக்கை மூலம் வலியுறுத்தியிருந்தார்.
அதை தொடர்ந்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம், 174.92 கோடி ரூபாயை, 6,889 விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தியது.
ஆனால், மீதமுள்ள 472 விவசாயிகளுக்கு 7.52 கோடி ரூபாய் வழங்காமல், கடந்த ஐந்து மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்த தொகையை வழங்கக்கோரி, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பருவமழை பொய்த்து போனது. ஆறு, மற்றும் ஏரிகள் வறண்டு போயுள்ளன. இக்கட்டான சூழலில் தான் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சொர்ணவாரி, சம்பா பருவங்களில் சாகுபடி செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்று வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறதே தவிர, பெரிய அளவில் லாபம் இல்லை.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு நெல் மூட்டைக்கு ஊழியர்கள் 40 ரூபாய் லஞ்சம் பெறுகின்றனர். இதற்கு தடுப்பு நடவடிக்கை இல்லை. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளும் பாதுகாக்கப்படுவதில்லை.
இப்படியான சூழலில் நெல்லை விற்கிறோம். ஆனால், விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கு முறையாக வழங்க வேண்டிய தொகையை ஐந்து மாதங்களாக வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
இதனால், 472 விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 7.52 கோடி ரூபாயை உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபழக அதிகாரிகள் கூறுகையில், 'தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 7.52 கோடி ரூபாய் வழங்க, அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். விவசாயிகளுக்கு விரைவாக பணம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திடம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு பணம் இரண்டு நாட்களில், வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்தில் நெல் விற்பனை செய்தால், மாதகணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், விவசாயிகள் வாழ்வதாரம் பெரிதும் பாதிப்பதால், நிலுவை பணத்தை உடனே வழங்க வேண்டும். எம்.வெங்கடேசன், தலைவர், செங்கல்பட்டு மாவட்ட விவசாய நலச்சங்கம்.
