/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் நீண்டகால ஆக்கிரமிப்புளால் திண்டாட்டம்! குறுகிய சாலைகளால் தொடரும் நெரிசல்
/
மாமல்லையில் நீண்டகால ஆக்கிரமிப்புளால் திண்டாட்டம்! குறுகிய சாலைகளால் தொடரும் நெரிசல்
மாமல்லையில் நீண்டகால ஆக்கிரமிப்புளால் திண்டாட்டம்! குறுகிய சாலைகளால் தொடரும் நெரிசல்
மாமல்லையில் நீண்டகால ஆக்கிரமிப்புளால் திண்டாட்டம்! குறுகிய சாலைகளால் தொடரும் நெரிசல்
ADDED : ஆக 13, 2024 11:10 PM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நீண்டகாலமாக செயல்படும் நடைபாதை கடைகள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது. அதிக அளவில் வந்து செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ஏற்ப சாலைகள் அகலப்படுத்தப்படாததால், சுற்றுலா பயணியர் திண்டாடுகின்றனர்.
மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் ஆகிய, பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இயற்கைச்சூழல் கடற்கரையும் உள்ளது.
சிற்பங்களை காண, உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் குவிகின்றனர். இது ஒருபுறமிருக்க, கடற்கரை விடுதிகள், ரெஸ்டாரன்ட் உணகவங்கள் ஆகியவை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், வார இறுதி, பண்டிகை, அரசு விடுமுறை ஆகிய நாட்களில், சென்னை பகுதியினர், ஒரு நாள் சுற்றுலாவாக, அருகில் உள்ள மாமல்லபுரத்திற்கு படையெடுக்கின்றனர்.
பெரும்பாலானோர், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் வருவதால், ஒரே நாளில் பல நுாறு வாகனங்கள் குவிகின்றன. இங்குள்ள சாலைகளோ, சுற்றுலா போக்குவரத்திற்கேற்ப அகலமாக இல்லை. குறுகிய சாலைகளே உள்ளன.
இங்குள்ள கடற்கரை சாலை, ஐந்து ரதங்கள் சாலை, தென்மாட வீதி, கிழக்கு ராஜவீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை உள்ளிட்ட சாலைகள், பிரதான சாலைகள். இவை அனைத்தும், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், வாகன போக்குவரத்து குறைவு. அதற்கேற்ப சாலைகள் குறுகிய அகலத்தில் அமைக்கப்பட்டன. பயணியர் வருகையும் குறைவு. அவர்களும் பெரும்பாலும், அரசுப் பேருந்தில் மட்டுமே வருவர்.
நாளடைவில், சுற்றுலா படிப்படியாக மேம்பட்டு, பயணியர் தனி வாகனத்தில் வருவது அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பு, சர்வேதச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜி - 20 நாடுகள் மாநாடுகள் ஆகியவை நடந்து, சர்வதேச கவனத்தை கவர்ந்து, சுற்றுலா மேலும் களைகட்டுகிறது. இச்சூழலில், சாலைகள் போதுமான அகலத்தில் இல்லை.
சாலைகளின் இருபுறமும், நிரந்தர கடைகள், நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து, சாலைகள் குறுகியுள்ளன. வாகனங்கள் சாலையை அடைத்து நிறுத்தப்படுகின்றன.
சிற்ப பகுதிகளில், குறுகிய வாகன நிறுத்துமிடத்திலும், வாகனங்களை நிறுத்த இடமின்றி, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, நீண்டதுாரம் நிறுத்தப்படுகின்றன. விடுமுறை நாட்களில், எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்ல இயலவில்லை.
சாலைகளில் நீண்டதுாரம் வாகனங்கள் அணிவகுத்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு, கடலில் சிக்கியவர் மீட்பு ஆகியவற்றுக்கு, தீயணைப்புத்துறை வாகனம் எளிதில் செல்ல இயலாமல், போக்குவரத்தில் சிக்குகின்றன.
டிச., - ஜன., மாதங்களில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் பக்தர்களின் பேருந்துகள், தினமும் குவிந்து, மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. பயணியர் நடந்து செல்லவும் இயலாமல் திண்டாடுகின்றனர்.
கடந்த 1998ல், அன்றைய செங்கல்பட்டு சப் - கலெக்டரும், இன்றைய வருவாய்த்துறை செயலருமான அமுதா, பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு, சாலை அளவிட்டு குறியிடப்பட்டது. அவர் பணியிடம் மாறிய நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் முடங்கியது.
மேற்கு ராஜவீதி, அர்ஜுனன் தபசு சிற்ப பகுதியாக உள்ளதால், அதில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007ல், ஐந்து ரதங்கள் சாலையில், 500 மீ.,க்கு மட்டும் மையதடுப்புடன் நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டது.
பிற சாலைகளும் அவ்வாறே மேம்படுத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்த பொதுப்பணித்துறை சாலை, பேரூராட்சி நிர்வாகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது, சென்னை சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் உள்ளடக்குவது என நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இவ்வூர் மேலும் வளர்ச்சியடையும்.
எனவே, அனைத்து பிரதான சாலைகளையும், மையத்தடுப்புடன் விரிவாக்கி மேம்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.