/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனங்களில் அலற வைக்கும் 'ஏர் ஹாரன்' போலீசார் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
/
வாகனங்களில் அலற வைக்கும் 'ஏர் ஹாரன்' போலீசார் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
வாகனங்களில் அலற வைக்கும் 'ஏர் ஹாரன்' போலீசார் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
வாகனங்களில் அலற வைக்கும் 'ஏர் ஹாரன்' போலீசார் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
ADDED : ஜூன் 01, 2025 08:58 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மதுராந்தகம், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து நகராட்சிகள் உள்ளன.
திருப்போரூர், திருக்கழுக்குன்றம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய ஐந்து பேரூராட்சிகள் மற்றும் 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த நகரங்களை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி., சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலை., செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை என, மாவட்டத்தில் முக்கிய தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளில் டூ- வீலர்கள், கார், தனியார் தொழிற்சாலை பேருந்து, சரக்கு வாகனங்கள், டாரஸ் லாரிகள் என, லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
இந்த வாகனங்களில், அதிக ஒலி எழுப்பும் 'ஹாரன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் 'ஏர் ஹாரன்' மற்றும் அதிக ஒலி எழுப்பும் 'ஹாரன்'கள் பயன்படுத்தப்படுவதால், சாலையில் நடந்து செல்வோருக்கு கடும் மன உளைச்சல் ஏற்படுகிறது.
குறிப்பாக, பல தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஏர்ஹாரனை பயன்படுத்தி, முன்னால் செல்லும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிறு வாகனங்களை பயமுறுத்துகின்றனர்.
இதுபோன்று ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது கடமைக்கு நடவடிக்கை எடுக்காமல், நிரந்தரமாக ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுவதை முடக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி, 70 'டெசிபல்' அளவுக்கு ஒலி எழுப்பும் ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதற்கும் அதிகமான டெசிபல் சத்தத்தால் காது கேளாமை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக ஒலி எழுப்பும் 'ஏர் ஹாரன்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சமயத்தில், ஏர் ஹாரனை தொடர்ந்து அடிப்பது, பொது மக்களுக்கு ஒருவித பதற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்தந்த வாகனத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட 'டெசிபல்' உள்ள ஹாரனை பொருத்திக் கொடுக்கின்றன.
ஆனால் டூ வீலர், லாரி, பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி, விருப்பம் போல், 'ஆல்டர்' செய்வதுடன், விதவிதமான ஏர் ஹாரன்களை பொருத்திக் கொள்கின்றன.
நாய் குரைத்தல் போன்றும், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கான 'சைரன்' போன்றும், பல்வேறு சத்தங்களை எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால், சாலையில் செல்வோர் திடீரென அதிர்ச்சி அடைகின்றனர்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஷ்டத்துக்கு ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவது நோயாளிகள், குழந்தைகளை பாதிக்கும் வகையில் உள்ளது.
எனவே, போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையினரும் அடிக்கடி சோதனை செய்து, ஏர் ஹாரன் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.