/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தரமின்றி கட்டிய திருநங்கையர் தொகுப்பு வீடுகள் சீரமைப்பு பணியும் ஜவ்வாக இழுப்பதால் அதிருப்தி
/
தரமின்றி கட்டிய திருநங்கையர் தொகுப்பு வீடுகள் சீரமைப்பு பணியும் ஜவ்வாக இழுப்பதால் அதிருப்தி
தரமின்றி கட்டிய திருநங்கையர் தொகுப்பு வீடுகள் சீரமைப்பு பணியும் ஜவ்வாக இழுப்பதால் அதிருப்தி
தரமின்றி கட்டிய திருநங்கையர் தொகுப்பு வீடுகள் சீரமைப்பு பணியும் ஜவ்வாக இழுப்பதால் அதிருப்தி
ADDED : ஜூலை 02, 2025 02:15 AM

செய்யூர்:ஆட்சிவிளாகத்தில், திருநங்கையருக்கான தொகுப்பு வீடுகள் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சோத்துப்பாக்கம், படாளம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட திருநங்கையர், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
சரியான முறையில் வீட்டுமனை மற்றும் வீடுகள் இல்லாததாலும், மின்சார வசதி, சாலை வசதி இல்லாமலும் அவதிப்பட்டு வந்தனர்.
வீடு இல்லாத 50 திருநங்கையருக்கு அரசு சார்பாக, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆட்சிவிளாகம் பகுதியில் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இருளர் குடியிருப்பு பகுதியில் வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு ஏப்., மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இங்கு, 50 திருநங்கையருக்கும் தலா, 8.78 லட்சம் ரூபாயில் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த தொகுப்பு வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால், திருநங்கையருக்கான தொகுப்பு வீடுகளின் தரத்தை பரிசோதனை செய்து, அதன் பின் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, 2023ம் ஆண்டு நவம்பரில், சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த, மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்தது.
இந்த குழுவினர் கட்டடத்தின் உறுதித் தன்மை, கட்டுமானப் பொருட்களின் தரம், கட்டடத்தின் அளவீடுகளை பரிசோதனை செய்தனர்.
இதில், கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் தரமற்ற முறையில் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து வீடுகளின் சிமென்ட் பூச்சுகளையும் அகற்றி, புதிதாக தரமாக சிமென்ட் பூச்சு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதன் பின், 2024 ஏப்., மாதம், சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டு, தற்போது வரை மந்தமாக நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, தொகுப்பு வீடுகளுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் திருநங்கையர், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, வீடு சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, தொகுப்பு வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.