/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏர்போர்ட் -- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம்... இழுத்தடிப்பு
/
ஏர்போர்ட் -- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம்... இழுத்தடிப்பு
ஏர்போர்ட் -- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம்... இழுத்தடிப்பு
ஏர்போர்ட் -- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம்... இழுத்தடிப்பு
ADDED : நவ 24, 2024 02:37 AM

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், பணிகள் துவங்காமல் கிடப்பில் உள்ளன. இதனால், இந்த திட்டத்திற்கு விடிவு பிறக்காதா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையில் தற்போது 54 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 'விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்' என, 2018ல் அறிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின், மெட்ரோ ரயில் சேவையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ., துாரத்திற்கு, 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னை ஜி.எஸ்.டி., சாலையையொட்டி அமையவுள்ள இந்த தடத்தில் பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க., நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பிரச்னை என்ன?
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைத்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் இந்த திட்டத்தின் வடிவமைப்பை இறுதி செய்து, அடுத்தகட்ட பணிகளை துவங்கவில்லை.
இந்த தடத்தில், பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டமிட்டுள்ள மேம்பாலங்களும் அமைய உள்ளதால், மெட்ரோ திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
முதலில், 78 அடி உயரத்தில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதை 52 அடியாக குறைக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகும், இந்த திட்ட பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல், இழுபறி நீடிக்கிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையம் -- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தில், சிறிய அளவில் மாற்றங்கள் செய்து வருகிறோம். நெடுஞ்சாலை மேம்பால பாதைக்கு மேல், மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில், மூன்று நிலைகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இப்போது, இரண்டு நிலைகளாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான மாற்றங்களை செய்துள்ளோம். இதை, ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். இதையடுத்து, அரசின் ஒப்புதலை பெற்று, அடுத்த கட்ட திட்டப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.