/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாய நிலத்தில் குடிநீர் ஆலை ஊனமாஞ்சேரியில் நிலத்தடி நீர் பாதிப்பு
/
விவசாய நிலத்தில் குடிநீர் ஆலை ஊனமாஞ்சேரியில் நிலத்தடி நீர் பாதிப்பு
விவசாய நிலத்தில் குடிநீர் ஆலை ஊனமாஞ்சேரியில் நிலத்தடி நீர் பாதிப்பு
விவசாய நிலத்தில் குடிநீர் ஆலை ஊனமாஞ்சேரியில் நிலத்தடி நீர் பாதிப்பு
ADDED : ஜூலை 03, 2025 01:36 AM

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில், விவசாய நிலத்தில் குடிநீர் ஆலை அமைத்து, தினமும் பல லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், வேளாண் தொழிலே பகுதிவாசிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இங்கு பெரிய ஏரி, சித்தேரி என, இரண்டு ஏரிகள் உள்ளன. ஆனால், ஏரிகளுக்கு நீர் வரக்கூடிய வரத்து கால்வாய் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், கன மழை பெய்தால் மட்டுமே ஏரியில் நீர் தேங்குகிறது.
இதனால், ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே, ஏரி நீரை பயன்படுத்தி விவசாய தொழில் நடைபெறுகிறது.
மற்ற மாதங்களில், ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு பாசனம் மூலமாக விவசாயம் நடைபெறுகிறது.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், ஊனமாஞ்சேரியில் உள்ள விவசாய நிலத்தில், தனியார் குடிநீர் ஆலை துவக்கப்பட்டது.
அந்த ஆலை மூலமாக, நாள்தோறும் பல லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்பட்டு, லாரிகளில் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதால், விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
தனியார் குடிநீர் ஆலை மூலமாக, தினமும் பல லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுவதால், கடந்த ஆறு ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களின் ஆழ்துளைக் கிணறுகளில், போதிய நீர் வரத்து இல்லை. தவிர, கிணறுகளும் வற்றத் துவங்கி விட்டன.
இதனால், கடந்த ஆண்டு வரை விவசாய தொழிலை செய்தவர்கள், தற்போது போதிய நீர் ஆதாரமின்றி, விவசாயத்தைத் தொடர முடியவில்லை.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.