/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ் - லாரி மோதல் நடத்துனர் படுகாயம்
/
பஸ் - லாரி மோதல் நடத்துனர் படுகாயம்
ADDED : நவ 08, 2024 01:29 AM

மதுராந்தகம்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனவேல், 42. இவர், அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று, கிளாம்பாக்கத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி, 40க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை மகேந்திரன், 52, என்பவர் ஓட்டிச் சென்றார்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கருங்குழி பேரூராட்சி அலுவலகம் அருகே சென்ற போது, இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி, பேரூராட்சி சாலையில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது.
திடீரென லாரி திரும்பியதால், அரசு பேருந்து, லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தின் முன்புறம் முழுதும் சேதமடைந்தது.
பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த நடத்துனர் தனவேல் பலத்த காயமடைந்தார். சிறிய காயங்களுடன் ஓட்டுநர் மகேந்திரன் உயிர் தப்பினார்.
பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

