/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாய் உடைப்பால் முடிச்சூரில் குடிநீரின்றி தவிப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பால் முடிச்சூரில் குடிநீரின்றி தவிப்பு
குடிநீர் குழாய் உடைப்பால் முடிச்சூரில் குடிநீரின்றி தவிப்பு
குடிநீர் குழாய் உடைப்பால் முடிச்சூரில் குடிநீரின்றி தவிப்பு
ADDED : செப் 30, 2024 05:26 AM
முடிச்சூர், : தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி, 1வது வார்டில், கோ - ஆப்டெக்ஸ் காலனி, கோபால் நகர், துர்கா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளுக்கு, சீக்கனா ஏரி பொது கிணற்றில் இருந்து, அபிபுல்லா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய், முடிச்சூர் - மணிமங்கலம் சாலையின் அடியில் செல்கிறது.
இந்த நிலையில், மணிமங்கலம் சாலையில், சமையல் காஸ் குழாய் பதிக்கும்போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குடிநீர் வினியோகம் தடைப்பட்டு, ஒரு மாதமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.
ஆழ்துளை கிணறு தண்ணீர் உபயோகிப்பாளர்கள் தவிர்த்து மற்றவர்கள், 1,300 ரூபாய் கொடுத்து, 12,000 லிட்டர் கொள்ளளவு லாரி தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முடிச்சூர் - மணிமங்கலம் சாலை சந்திப்பில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, ஊராட்சி நிர்வாகம் மூன்று முறை முயற்சி செய்தும், நெடுஞ்சாலைத் துறையினர் குறுக்கிட்டு பணியை தடுத்துவிட்டனர்.
அந்த இடத்தில், பள்ளம் தோண்டி சீரமைப்பு பணி செய்ய, மின் வாரியம், போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கியும், முறைப்படி கடிதம் கொடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி வழங்காமல் அலட்சியப்படுத்தி வருவதாக, ஊராட்சி நிர்வாகத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து, மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.