/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை சைபர் க்ரைம் பிரிவில் போலீசார் பற்றாக்குறையால்... வழக்குகள் தேக்கம்: 5 ஆண்டு ஆன்லைன் மோசடியில் ரூ.1.50 கோடி மட்டுமே மீட்பு
/
செங்கை சைபர் க்ரைம் பிரிவில் போலீசார் பற்றாக்குறையால்... வழக்குகள் தேக்கம்: 5 ஆண்டு ஆன்லைன் மோசடியில் ரூ.1.50 கோடி மட்டுமே மீட்பு
செங்கை சைபர் க்ரைம் பிரிவில் போலீசார் பற்றாக்குறையால்... வழக்குகள் தேக்கம்: 5 ஆண்டு ஆன்லைன் மோசடியில் ரூ.1.50 கோடி மட்டுமே மீட்பு
செங்கை சைபர் க்ரைம் பிரிவில் போலீசார் பற்றாக்குறையால்... வழக்குகள் தேக்கம்: 5 ஆண்டு ஆன்லைன் மோசடியில் ரூ.1.50 கோடி மட்டுமே மீட்பு
ADDED : ஆக 17, 2025 01:05 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் 10 போலீசார் பணிபுரிய வேண்டிய நிலையில் இருவர் மட்டுமே இருப்பதால், ஆன்லைன் மோசடி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கு முடியாமல், வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 'ஆன்லைன்' மோசடியில் 42.91 கோடி ரூபாய் இழந்த நிலையில், 1.50 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 2021ம் ஆண்டு முதல் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு இயங்கி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். மளிகை கடை முதல் பெரிய அளவிலான கடைகள் வரை, இணைய வழியிலேயே, மொபைல் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.
இந்நிலையில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், உங்கள் முகவரிக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பார்சலில் பணம் உள்ளதால், வரி செலுத்த வேண்டும் என மிரட்டி, ஆன்லலைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
பண பறிப்பதற்காக, மக்களை தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகள், ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை, அவர்களிடம் கேட்டு பெறுகின்றனர். அதன் வாயிலாக அவர்களின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை திருடுகின்றனர்.
சில மாதங்களாக, போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக கூறி, வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகியவற்றை பெற்றும், நுாதன மோசடி நடந்து வருகிறது. இது போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, கல்பாக்கம் அணுபுரம், மாமல்லபுரம், மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 2021ல் துவங்கி, கடந்த ஜூலை மாதம்வரை, 365 வழக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில், 42.92 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் புகாரை அடுத்து, செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடித்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும், கடந்த ஐந்தாண்டுகளில், 1.50 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதுதான் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு உள்ளது. இங்கு, ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் மற்றும் 10 போலீசார் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால், இரண்டு போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், சைபர் க்ரைம் வழக்குகள் அதிகளவில் தேக்கமடைந்து வருகின்றன.
வழக்குகளை விரைவாக முடிக்க, ஒரு ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை, அரசு நிரப்ப வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.