/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
/
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2024 04:04 AM
சென்னை : கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவதோடு, அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டுமென, போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர்.
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம், 88 ஏக்கர் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 215 பேருந்துகளை இயக்க முடியும். முதல்கட்டமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை மையம்
வாகன நிறுத்தம் வசதி, மின்துாக்கி, எஸ்கலேட்டர், கண்காணிப்பு கேமராக்கள், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, அவசர சிகிச்சை மையம், மருந்தகம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன.
ஆனாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு போதிய இணைப்பு பேருந்துகள், வாகன வசதிகள் இல்லை என, பயணியர் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
சென்னையில் நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் புது பேருந்து நிலையம் திறக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
இருப்பினும், சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தடையின்றி இணைப்பு பேருந்துகளை இயக்கினால் மட்டுமே, இந்த புதிய நிலையம் திறந்ததற்கான உரிய பலன்களை பெற முடியும்.
அருகில் அமைய உள்ள கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுபோல், மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
அருகில் உள்ள வண்டலுார், ஊரப்பாக்கம், பெருங்களத்துார் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அதுபோல் வாடகை சைக்கிள், 'பேட்டரி' இருசக்கர வாகன திட்டங்களை செயல்படுத்தலாம்.
மேலும், நடைபாதைகளை ஆக்கிரமிப்புகளின்றி பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, அண்ணா பல்கலை ஓய்வுபெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் கூறியதாவது:
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை பிரமாண்டமாக கட்டி திறந்துள்ளனர். இந்த பேருந்து நிலையத்திற்கு, இணைப்பு பேருந்துகளை தடையின்றி இயக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
'ஸ்வாக்' பாலம்
பேருந்துகளின் இயக்க மாற்றத்தை, பயணியருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். கடைசி நேரத்தில் அறிவித்து செயல்படுத்தி, பயணியரிடம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. வெளியூர் செல்வோர், மாநகர பேருந்துகளில், 'லக்கேஜ்' கொண்டு செல்ல இடவசதி ஏற்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வகையில் 'ஸ்வாக்' பாலம் அமைக்க வேண்டும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க, மாநகரின் மற்ற வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. புதிய பேருந்துகளின் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

