67 ஊராட்சிகளில் செயலர் பணியிடங்கள் காலி! குடிநீர், தெருவிளக்கு சீரமைப்பு பணி சுணக்கம்
67 ஊராட்சிகளில் செயலர் பணியிடங்கள் காலி! குடிநீர், தெருவிளக்கு சீரமைப்பு பணி சுணக்கம்
UPDATED : ஆக 17, 2026 03:08 AM
ADDED : ஆக 16, 2026 09:02 PM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் காலியாக உள்ள 67 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.தவிர, கூடுதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளையும் மேற்கொள்வதால், ஊராட்சி செயலர்கள் பணிச்சுமையில் தவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், புனிததோமையர்மலை, லத்துார் என, எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், 359 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகள் தோறும், தலா ஒரு ஊராட்சி செயலர் பணியிடம், துாய்மை பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள் என, பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
இதில், வரி வசூல், குடிநீர், சுகாதாரம், கிராம வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளிவிபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளில், 67 பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு ஒளிரவில்லை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை சரிசெய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஊராட்சி செயலரும், மற்றொரு ஊராட்சி நிர்வாகத்தை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதனால், வரி வசூல் ரசீது பெறும் பணிகளில் சிக்கல் நீடித்து வருகிறது.
தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டுள்ளதால், அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒதுக்கீடு
இதுகுறித்து, ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது:
ஒரு ஊராட்சி செயலருக்கு, மற்றொரு ஊராட்சி கூடுதல் பொறுப்பாக அளிக்கும் போது, குடிநீர், தெரு விளக்கு சரிசெய்யும் பணிகளில், சற்று தாமதமாக தான் செய்ய முடிகிறது. இருப்பினும், சரிசெய்து விடுகிறோம்.
அதேபோல, வரி வசூலிக்கும் போது, 'சர்வர்' சரியாக கிடைத்த பின், 'ஆன்லைன்' ரசீது வந்தால் மட்டுமே, 'பில்' எடுத்து கொடுக்க முடிகிறது. சர்வர் தொழில்நுட்ப பிரச்னையால், பில் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த 1ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை, அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் கூடுதல் பணியாக வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை ஆசிரியர்கள், வருவாய் துறையினர் செய்து வந்த பணியை, தற்போது எங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி, பணியிடத்தில் உள்ள ஊராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தாமல், மற்ற ஊராட்சிகளில் நியமித்து உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில், 34 கேள்விகள் மக்களிடம் கேட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யம்படி கூறப்பட்டு உள்ளது.
அந்த ஊராட்சிக்கு நாங்கள் புதிது என்பதால், மக்கள் பதில் அளிக்க மறுக்கின்றனர். இதனால், அவர்களுக்கு புரிய வைத்து கேள்விக்கான பதில்களை பெற 30 நிமிடங்கள் வரை ஆகிறது.
தொடக்கத்தில், ஒரு ஊராட்சி செயலர் 200 வீடுகள் மட்டுமே மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவார் என, பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது. தற்போது, 700 - 1,800 வீடுகள் வரை கணக்கெடுப்பு பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
இதுவரை கணக்கெடுப்பு பணிகளுக்கு சென்றுவர எந்த ஊக்கத்தொகை குறித்தும் தெரிவிக்கவில்லை. அனைத்து ஊராட்சி செயலரும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தில் பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை, வருவாய் துறை உள்ளிட்ட துறையினருக்கும் பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறிவிப்பு வெளியாக வில்லை
கடந்த தி.மு.க., ஆட்சியில், 2025 அக்., மாதம் ஊராட்சி செயலர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பு மதிப்பெண், நேர்முக தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்தாண்டு டிச., மாதம் நேர்முக தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பணி நியமனத்திற்கு பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், எட்டு மாதங்களாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.ராஜேஷ், செங்கல்பட்டு.
![]() |

