வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : பிப் 03, 2026 05:49 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அருகே, வனப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள செங்குன்றம், திருத்தேரி, ஆப்பூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.
இதில் மயில், மான், முள்ளம்பன்றி உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.
இந்த வனப்பகுதியில் பல்வேறு இடங்களில், இரவு நேரங்களில் குப்பைக் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முறைகேடாக, கட்டட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே இதை தடுக்க, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
