/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை பொது மருத்துவமனையாக்க எதிர்பார்ப்பு
/
கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை பொது மருத்துவமனையாக்க எதிர்பார்ப்பு
கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை பொது மருத்துவமனையாக்க எதிர்பார்ப்பு
கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார மையத்தை பொது மருத்துவமனையாக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 21, 2025 08:36 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை, பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் ஐந்து ஏக்கர் பரப்பில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
தினமும் 300 முதல் 500 நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தவிர மகப்பேறு, குழந்தை நலன் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சையும், சித்த மருத்துவத்திற்கு தனிப் பிரிவும் உள்ளது. தனியார் பங்களிப்புடன் இலவச, 'டயாலிசிஸ்' சிகிச்சை மையமும் செயல்படுகிறது.
கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்பிற்கு, இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இது, ஆரம்ப சுகாதார நிலையம் என்பதால், உடல் நல பாதிப்பு தொடர்பாக, குறிப்பிட்ட சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரம் பொறுத்து, மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அல்லது செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதனால், நோயாளிகளுக்கு நேர விரயம், அலைச்சல், மன உளைச்சல் ஏற்படுகிறது.
எனவே, கூடுவாஞ்சேரி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை, அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பு விதிப்படி, 5,000 பேர் வசிக்கும் ஒரு பகுதிக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையமும், 25,000 பேர் வசிக்கும் பகுதிக்கு, ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையமும் இயங்க வேண்டும்.
அதன்படி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் கூடுவாஞ்சேரியில், நான்கு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டுமே உள்ளது.
தவிர, சுற்றுப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுகாதார மையங்கள் இல்லை என்பதால், அவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
பாம்புக்கடி, விபத்து, தீக்காயம், காய்ச்சல் உள்ளிட்ட பலவகை பாதிப்புகளுக்கு, இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சை என வரும் போது, குரோம்பேட்டை மற்றும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கே நோயாளிகளை அனுப்ப வேண்டியுள்ளது.
தமிழகத்தில் 8,713 துணை சுகாதார மையங்கள், 2,127 ஆரம்ப சுகாதார மையங்கள், 423 மேம்படுத்தப்பட்ட சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.
இவை,'டி.பி.ஹெச்.,' எனும் நோய்த் தடுப்பு பிரிவின் கீழ், அரசால் இயக்கப்படுகின்றன. ஆகவே, இங்கு பெரிய அளவிலான, சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய, உலக சுகாதார அமைப்பு தடை விதித்துள்ளது.
உயர் சிகிச்சை மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளை, 'டி.எம்.எஸ்.,' என்ற பிரிவின் கீழ் வரும் அரசு பொது மருத்துவமனைகள் மட்டுமே செய்ய முடியும்.
எனவே, கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தை, டி.பி.ஹெச்., என்ற பிரிவிலிருந்து டி.எம்.எஸ்., என்ற பிரிவிற்கு மாற்றி, இப்பகுதி மக்கள் அனைத்து வகையான சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.