/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 14, 2025 10:50 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை பிரித்து, மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் புதிய காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம், கடந்த 1915ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு ஆத்துார், திம்மாவரம், பொன்விளைந்தகளத்துார், அஞ்சூர், குண்ணவாக்கம், வல்லம், ஆலப்பாக்கம் உள்ளிட்ட 74 கிராமங்கள் உள்ளன.
திருவடிசூலம் பகுதியில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, புகழ்பெற்ற ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் திருட்டு, குற்ற சம்பவங்களை போலீசார் கண்காணித்து வந்தனர். துவக்கத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் இருந்ததால், குற்றவாளிகளை கண்காணிப்பது எளிதாக இருந்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு அடுத்த குண்ணவாக்கம், வீராபுரம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், தெற்குபட்டு, பட்டரவாக்கம் ஆகிய கிராமங்களில், விவசாய நிலங்களை கையகப்படுத்தி மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆரம்பிக்கப்பட்டது.
இங்கு, பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் என, 74 தனியார் நிறுவனங்கள் உள்ளன.
இந்நிறுவனங்களில், தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், திருவடிசூலம் பகுதியில், 51 அடி உயர கருமாரியம்மன் கோவில், ஈச்சங்கரணை பகுதியில் பைரவர் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன.
இதனால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியில், குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், கட்டுமான பணியில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர், வாடகை வீடுகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
மென்பொருள் நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளதால், பலர் இரவுப் பணி முடிந்து வீட்டிற்கு செல்கின்றனர். இதைப் பயன்படுத்தி சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள், இரவு நேரங்களில் தனியாக செல்லும் ஊழியர்களை வழிமறித்து நகை, பணம், மொபைல்போன் ஆகியவற்றை திருடிச் செல்கின்றனர்.
சென்னை புறநகர் பகுதியாக உள்ளதால், தொழிற்சாலை பகுதியில் உள்ள ஹோட்டல்களில் ரவுடிகள் தங்கி, குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, மகேந்திரா வேர்ல்டு சிட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து, தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர்.
இப்பகுதியினர் 10 கி.மீ., துாரம் தொலைவில் உள்ள, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குச் சென்று, புகார் அளிக்க வேண்டியுள்ளது.
இதனால், புகார் அளிக்க நீண்ட துாரம் செல்ல முடியாமல், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, மேற்கண்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குற்ற வழக்குகளை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தை பிரித்து, மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.