/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விலை உயர்ந்த பைக் திருடியோர் மறைமலை நகரில் கைது
/
விலை உயர்ந்த பைக் திருடியோர் மறைமலை நகரில் கைது
ADDED : ஆக 08, 2025 10:26 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விலை உயர்ந்த பைக்குகளை குறி வைத்து திருடிய நபர்களை, போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு, சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கே.டி.எம்., பைக்கில் அமர்ந்து, மற்றொரு 'டியூக்' பைக்கை 'டோப்' செய்து எடுத்து வந்த மூவரை நிறுத்த முயன்றனர்.
போலீசாரை கண்டதும், மூவரும் பைக்குகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். துரத்திச் சென்ற போலீசார், அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்ட நபர்கள் சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பகத்,20, மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரிந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிறுத்தப்படும் 'கே.டி.எம்., - டியூக்' போன்ற, விலை உயர்ந்த பைக்குகளை குறிவைத்து திருடி வந்தது தெரிந்தது.
மேலும், திருடிய பைக்குகளை தென்காசிக்கு எடுத்துச் சென்று, ஆன்லைனில் ஓ.எல்.எக்ஸ்., மூலமாக விற்க முயன்றதும் தெரிந்தது.
இவர்களிடமிருந்து தற்போது இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்துள்ள ஆறு பைக்குகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிச் சென்ற மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.