/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீரில் மூழ்கி 2,434 ஏக்கர் நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள்... பரிதவிப்பு:மூன்று மாவட்டங்களில் 58 வீடுகள் சேதம்; 34 மாடுகள் பலி
/
நீரில் மூழ்கி 2,434 ஏக்கர் நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள்... பரிதவிப்பு:மூன்று மாவட்டங்களில் 58 வீடுகள் சேதம்; 34 மாடுகள் பலி
நீரில் மூழ்கி 2,434 ஏக்கர் நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள்... பரிதவிப்பு:மூன்று மாவட்டங்களில் 58 வீடுகள் சேதம்; 34 மாடுகள் பலி
நீரில் மூழ்கி 2,434 ஏக்கர் நெற்பயிர் நாசமானதால் விவசாயிகள்... பரிதவிப்பு:மூன்று மாவட்டங்களில் 58 வீடுகள் சேதம்; 34 மாடுகள் பலி
UPDATED : அக் 29, 2025 03:26 AM
ADDED : அக் 28, 2025 10:33 PM

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், வடகிழக்கு பருவமழையால் நீரில் மூழ்கி, 2,434 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. 58 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 34 கால்நடைகளும் இறந்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.
![]() |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் துவங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 'மோந்தா' புயல் காரணமாக, வட மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 இடங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 இடங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 114 இடங்களும், மழை பாதிக்கும் இடங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
![]() |
மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தீயணைப்பு, உள்ளாட்சி, வருவாய் துறை, காவல் துறை என, 11 துறை அதிகாரிகள் கொண்ட மண்டல குழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன.
இந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும், பரவலாக மழை பெய்ததால், வீடுகள் இடிந்து சேதமாவதும், பயிர்கள் மழைநீர் சூழ்ந்து அழுகிப் போவதும், கால்நடைகள் மின்சாரம் பாய்ந்தும், இடி, மின்னல் தாக்கி இறப்பதும் தொடர்கிறது.
விவசாயிகள் தவிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், சம்பா பருவத்திற்கு நெல் பயிர் சாகுபடி செய்திருந்தனர்.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை, கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், 118 ஏக்கர் நெல் பயிர்கள், நீரில் மூழ்கியுள்ளன. இதுமட்டுமின்றி, அறுவடைக்குத் தயாராக இருந்த, 16 ஏக்கர் நெல் பயிர்கள், நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கியுள்ள நெல் பயிர்களை பாதுகாக்க, வேளாண்மைத் துறை அதிகாரிகள் சார்பில், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், சம்பா பருவத்திற்கு, 45,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், தேவம்பட்டு, கங்காணிமேடு, பெரியகரும்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 2,000 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி, அழுக தொடங்கி விட்டன.
முறையான வடிகால் வசதியில்லாததால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியில்லை. ஏக்கருக்கு, 15,000 - 18,000 ரூபாய் வரை செலவிட்டு நெற்பயிர்கள் மழைநீரில் வீணாவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பொன்னேரி அடுத்த கள்ளூர், புதுக்குப்பம் கிராமங்கள் வழியாக பழவேற்காடு ஏரிக்கு, உவர்ப்பு நீர் செல்லும் ஓடை உள்ளது. ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, அங்கிருந்து வெளியேறும் உவர்ப்பு நீர் ஓடைக்கால்வாய் வழியாக வெளியேறியதால், 300 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாழாகி உள்ளன.
கணக்கெடுப்பு எனவே, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூன்று மாவட்டங்களிலும், அக்.,1 முதல் நேற்று வரையிலான கணக்கெடுப்பின்படி மழைநீரில் மூழ்கியோ, இடி, மின்னல், மின்சாரம் தாக்கி யாரும் இறக்கவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பெண் மட்டும் காயம் அடைந்துள்ளார்.
மூன்று மாவட்டங்களிலும் 34 கால்நடைகள் இறந்துள்ளன; 58 வீடுகள் சேதமடைந்து உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 51 கோழிகள் இறந்துள்ளன.
இதுகுறித்து, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வேளாண் நிலங்கள் பாதிப்பு குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். அவர்கள், கலெக்டர் மூலம், நேரடியாக அரசுக்கு அறிக்கை அனுப்புவர்.
ஆடு, மாடு, வீடு பாதிப்பு விபரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். வீடு, மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு போன்றவைக்கு கொடுக்கப்படும் இழப்பீடு தொகை, விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிப்படைவோர் பற்றிய விபரம், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மூலம் பேரிடர் மேலாண்மை துறைக்கு வந்துவிடும். நாங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி, இழப்பீடு பெற்றுத் தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேதமான பயிர் பாதிப்புகளை உடனே ஆய்வு செய்ய வேண்டும். காஞ்சிபுரம் அருகே உள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தில், பல ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் உறுதி செய்து, இழப்பீடு பெற்று தர வேண்டும். - கே.நேரு, மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
- நமது நிருபர் குழு -


