/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு கொள்முதல் நிலையத்தில் சிக்கல்; ஆலைகளுக்கு நெல் விற்கும் விவசாயிகள்!
/
அரசு கொள்முதல் நிலையத்தில் சிக்கல்; ஆலைகளுக்கு நெல் விற்கும் விவசாயிகள்!
அரசு கொள்முதல் நிலையத்தில் சிக்கல்; ஆலைகளுக்கு நெல் விற்கும் விவசாயிகள்!
அரசு கொள்முதல் நிலையத்தில் சிக்கல்; ஆலைகளுக்கு நெல் விற்கும் விவசாயிகள்!
UPDATED : அக் 24, 2025 12:27 PM
ADDED : அக் 23, 2025 10:40 PM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பதில் சிக்கல் உள்ளதால், விவசாயிகள் அரிசி ஆலைகளுக்கு நெல்லை விற்க துவங்கி உள்ளனர்.
திருக்கழுக்குன்றம் வட்டார பகுதி விவசாயிகள் பாலாறு, ஏரி, கிணறு ஆகிய நீர்ப்பாசனம் மூலமாக நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
பாதிப்பு தமிழ்நாடு நுகர்ப் பொருள் வாணிப கழகத்தின் கீழ் நேரடி கொள்முதல் நிலையங்கள் கீரப்பாக்கம், ஆயப்பாக்கம், நல்லாத்துார், நெரும்பூர், நத்தம் கரியச்சேரி உள்ளிட்ட இடங்களில் துவங்கி செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெல் கொள்முதலுக்கு கமிஷன், கொள்முதலில் தாமதம், குறைந்த அளவு நெல்லை வாங்க மறுப்பது உள்ளிட்ட சிக்கல்களால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அரிசி ஆலைகளுக்கு தங்களது நெல்லை, ஆர்வத்துடன் விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
கொள்முதல் நிலையங்களில், பல நாட்கள் கழித்தே நெல் மூட்டைகளை வாங்குகின்றனர். இதனால், வாகன வாடகை கூடுதலாகிறது. ஈரப்பதத்தை அதிகம் காண்பித்து, நெல் விலையை குறைக்கின் றனர். அதற்கான பணம் கிடைக்கவும் தாமதமாகிறது.
கமிஷனும் கேட்கின்றனர். கொள்முதல் செய்ய தாமதம் ஆவதால், மழையில் நெல்லை பாதுகாக்க முடியவில்லை. சதுரங்கப்பட்டினம், ஆயப்பாக்கம் போன்ற பகுதிகளில், கொள்முதல் நிலையத்திற்கு வழங்காமல், அரிசி ஆலைகளுக்கே நெல்லை விற்கிறோம்.
அரசு வழங்கும் விலையை விட, சற்று குறைவு என்றாலும், உடனே பணம் கிடைக்கிறது. 'புரோக்கர்'களும் விவசாயிகளிடம் நெல்லை வாங்கி, கொள்முதல் நிலையத்தில் விற்கின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முளைத்த நெல் காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், திறந்தவெளி அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வில்லியம்பாக்கம், பாலுார், ஆத்துார், திம்மாவரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்கள் மழையில் நனைந்தன.
மேலும், சுற்றியுள்ள பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியதால், நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் சரக்கு லாரிகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது நனைந்த நெல் குவியல்களை உலர்த்தும் பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

